கலாம் நினைவிடத்தில் தேங்கியுள்ள மழைநீர்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

rain water stagnation in kalam's Memorial OneIndia News : ராமேஸ்வரம்: மறைந்த அப்துல் கலாம் சமாதியை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் மழையின் தாக்கம் உள்ள நிலையில், அதிக அளவில் நீர் தேங்குவதற்கு முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் ராமேஸ்வரம் அருகே உள்ள பேகரும்பு என்ற கிராமத்தில் உள்ளது. நாடு முழுவதும் இருந்து ராமேஸ்வரம் வரும் யாத்திரிகர்கள், பொதுமக்கள் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையொட்டி இங்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் கலாமுக்கு நினைவகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்காலிகமாக மத்திய பொதுப்பணித்துறையினர் கலாம் நினைவிடத்துக்கு நிழல் குடை அமைத்துள்ளனர். அவர் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி இரும்பு கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக கலாம் சமாதியை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.இதனால் அவரது சமாதிக்கு வருபவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதனிடையே இன்னும் 5 தினங்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கன மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே, கலாம் சமாதியை சுற்றிலும் கூடுதலாக மழை நீர் தேங்குவதற்கு முன்பாக, தமிழக அரசு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments