சென்னை மிதக்க காரணம் என்ன? பொதுப்பணித்துறை அதிகாரி விளக்கம்

தினமலர் செய்தி : வெள்ளத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மிதப்பதற்கான காரணத்தை, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் விளக்கிஉள்ளார்.
பெயர் வெளியிட விரும்பாத அவர் கூறியதாவது: சென்னை, 178 கி.மீ., பரப்பளவு கொண்டது. இது, கடல் மட்டத்தில் இருந்து, 6 - 10 மீட்டர் உயரத்தில் உள்ளது. சென்னையின் நிலப்படுகை, நீரை குறைவாக உறிஞ்சும் தன்மை கொண்டது. பொதுவாகவே மழைநீர், மேடான நிலப்பரப்பில் இருந்து பள்ளமான நிலப்பரப்பை நோக்கி ஒடிவரும்.
இயல்பாகவே, தண்ணீர், ஐந்து கி.மீ., முதல், 10 கி.மீ., வரை பயணம் செய்தால் தான், ஒரு மீட்டர் பள்ளம் உள்ள இடம் கிடைக்கும். எனவே, கடல் மட்டத்தில் இருந்து உயரமான பகுதிகளில் பெய்யும் மழை நீர் தாழ்வான பகுதிகளுக்கு செல்வது இயற்கை. இந்த தண்ணீர், ஐந்து கி.மீ., முதல், 10 கி.மீ., வரை பயணம் செய்தால் தான், வடிய வழி ஏற்படும். 

அதனால் தான், மேடான பகுதிகளில் பெய்யும் பருவமழை, சென்னையை நோக்கி ஓடி வருகிறது. சென்னையின் நிலப்படுகை, மோசமாக இருப்பதால், அந்த நீரை உறிஞ்சுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் தான், வெள்ளத்தில் சிக்கி, சென்னை நகரின் பல பகுதிகள் மிதக்கின்றன. பூகோள அமைப்பை பார்க்கும்போது, மிகப்பெரிய புயலுக்கோ அல்லது மழை காலத்திற்கோ வாழ ஏற்ற இடமாக, சென்னை இல்லை என்பது தான், நிதர்சனமான உண்மை. அதனால் தான் பெரும் மழைக்காலங்களில், மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களை விட சென்னையில் மழை நீர் வடிய நாள் கணக்காகிறது. 

வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், இடம் பெயரும் பலரும், சென்னையில் சொந்தமான வீடு வாங்க வேண்டும் என நினைக்கின்றனர். அவ்வாறு அவர்கள் வாங்கும் இடம், சென்னையில் இதற்கு முன், ஏரி உள்ளிட்ட நீர் நிலையாக இருந்த இடமாக தான் இருக்கும். அந்த இடம், கடல் மட்டத்தில் இருந்து, 3 முதல், 5 மீட்டர் உயரம் உள்ள இடமாகவே இருக்கும். இப்படித்தான், சென்னையிலும், அதன் விரிவாக்க எல்லையிலும், சிறுசிறு நகர பகுதிகள் உருவாகியுள்ளன. அந்த இடங்கள் தான், மழைநீர் வெளியேற வழியில்லாமல், வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கின்றன.

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, இப்படி ஒரு வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற முயற்சி நடந்தது. அதன் பிறகு, அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஒவ்வொரு இடத்திற்கும், 25 ஆண்டுக்கு, ஒருமுறை அதிக வெள்ளம் வரும். அது போன்று தான், சென்னையில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.சென்னைக்கு மீண்டும், 20 - 25 ஆண்டுக்கு பிறகு, மீண்டும் வெள்ளம் வரும். அப்போது, தற்போதைய நிலையை விட, பல மடங்கு பாதிப்பு இருக்கும். எனவே, சென்னையில் வெள்ளம் வடியாமல் இருக்க, அரசை காரணம் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல், டீசல் விற்பனை பாதிப்பு : கனமழையால், சென்னையில் போக்குவரத்து முடங்கியுள்ளதால், பெட்ரோல், டீசல் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், 150; காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தலா, 200 உட்பட தமிழகத்தில், 4,500 பெட்ரோல் 'பங்க்'கள் உள்ளன. ஒரு, 'பங்க்'கில், தினமும் சராசரியாக, 2,000 லிட்டர் பெட்ரோல்; 3,000 லிட்டர் டீசல் விற்பனையாகிறது. சென்னை புறநகர், காஞ்சி, திருவள்ளூரில், 200 பெட்ரோல், 'பங்க்'கில், பெட்ரோல், டீசல் போடும் இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 100 'பங்க்'களின் உள்ளே செல்ல முடியாதவாறு, சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எவ்வளவு?

சென்னை மற்றும் புறநகரில் தினமும், 10 லட்சம் லிட்டர் பெட்ரோல்; 20 லட்சம் லிட்டர் டீசல் விற்பனையாகி வந்தது. தற்போது, இவற்றின் விற்பனை முறையே, 5 லட்சம் லிட்டர், 10 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.

Comments