’’31-10-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் திரையரங்குகள் நடத்துவதில் முன்னணியிலே உள்ள நிறுவனங்களில் ஒன்றான
எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனம், வேளச்சேரியில் உள்ள “பீனிக்ஸ்” மார்க்கெட் சிட்டியில் உள்ள தங்களுடைய பதினோறு திரையரங்குகளையும் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள்” என்று “தி இந்து” ஆங்கில நாளிதழ் “ஜாஸ் சினிமா நிறுவனம் லக்ஸ் மல்டிபிளக்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது” என்ற தலைப்பில், வெளியிட்ட செய்தியினை அப்படியே மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தேன்.
எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனம், வேளச்சேரியில் உள்ள “பீனிக்ஸ்” மார்க்கெட் சிட்டியில் உள்ள தங்களுடைய பதினோறு திரையரங்குகளையும் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள்” என்று “தி இந்து” ஆங்கில நாளிதழ் “ஜாஸ் சினிமா நிறுவனம் லக்ஸ் மல்டிபிளக்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது” என்ற தலைப்பில், வெளியிட்ட செய்தியினை அப்படியே மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தேன்.
இந்தச் செய்திக்கு ஆதாரமாக, “இந்து” நாளிதழ், “மத்திய அரசின் தனியார் நிறுவனங்கள் தொடர்பான அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து கிடைத்த தகவல்படி” என்றும் “இந்து” குறிப்பிட்டதோடு, அந்த வலைத்தளத்திலிருந்து எடுத்த ஆதாரங்களையும் அப்படியே வெளியிட்டிருந்தது. அவையனைத்தை யும் விரிவாகக் குறிப்பிட்டுத் தான் நான் அறிக்கை விடுத்திருந்தேன்.
இதற்கு தியேட்டர்களை இப்போது நடத்துபவர்களிடமிருந்தோ, தமிழக அரசிடமிருந்தோ இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. அதாவது சசிகலா - இளவரசி தரப்பினரிடமிருந்தோ, முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்தோ இதுவரை விளக்கம் ஏன் வரவில்லை?
நான் அறிக்கை விடுத்ததைப் போலவே, தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க் கட்சிகளின் தலைவர்களும், இந்தத் திரையரங்குகள் விவகாரம் பற்றி விடுத்த அறிக்கைகளையும் எடுத்துக்காட்டி, 3-11-2015 அன்று நான் விடுத்த அறிக்கை யில் “இப்படிப்பட்ட கடுமையான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரங்களுடன் வந்திருக்கிற போது, அரசுப் பொறுப்பிலே இருப்பவர்கள் இது வரை இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்று அனைவரும் யூகித்திடத் திடமான இடம் ஏற்பட்டு விட்டது அல்லவா? எனவே மக்கள் மனதிலே எழுந்துள்ள பொருள் பொதிந்த வினாக்களுக்கு விளக்கமான பதிலை அரசுத் தரப்பில் உடனடியாகத் தர வேண்டும். ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் இந்தத் திரையரங்குகளை வாங்கினார்களா? இல்லையா?
வாங்கியிருந்தால் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன? அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது? அந்தத் திரையரங்குகள் மிரட்டி வாங்கப் பட்டன என்ற குற்றச்சாட்டு உண்மையா? அந்தத் திரையரங்கங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் திட்டமிட்டுத் தாமதப்படுத்தப்பட்டனவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உரியவர்களிடமிருந்து பதில் வர வேண்டாமா? இந்தச் சொத்துக்களை வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், ஏற்கனவே லஞ்ச ஊழல் குற்றத்திற்காக வழக்கைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லவா? ஏற்கனவே பல சொத்துக்களை அவர்கள் வாங்கியதாக பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லவா? இப்போதாவது அவர்கள் உரிய விளக்கத்தோடு மக்களைச் சந்திக்க வேண்டாமா? சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், இந்தப் புதிய சொத்துக் குவிப்புக்கு என்ன பதில் என்று நாடே எதிர்பார்க்கிறது” என்று கேட்டிருந்தேன்.
இதற்கும் எந்தவிதமான பதிலும் இல்லை.
அதன் பிறகு 5-11-2015 அன்று “கேள்வி-பதில்” பகுதியில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான பதிலும் இல்லையே என்ற கேள்விக்கு, “இன்னும் ஓரிரு நாட்கள் பொறுத்திருங்கள்! தற்போது தான் சம்மந்தப்பட்டவர்களிடம் கெஞ்சி, கூத்தாடி, பூசி மெழுகி ஓர் விளக்கெண்ணெய் அறிக்கை வெளியிட பேசப்பட்டு வருகிறதாம்! எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை, முறைப்படி தான் எல்லாம் நடைபெற்றது என்று ஓர் பதில் வெளியிடுவதற்கான முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. பதில் வரட்டும், பார்க்கலாம். எந்தப் பதிலாக இருந்தாலும் இவ்வளவு தாமதத்திற்குப் பிறகு வரும் பதில், இட்டுக் கட்டிய பதிலாகவே தான் இருக்கும்!” என்று குறிப்பிட்டிருந்தேன்.
நான் குறிப்பிட்டதை அப்படியே நிரூபிக்கும் வகையிலே தான், ஜாஸ் நிறுவனம், 11 தியேட்டர்களை விலைக்கு வாங்கவில்லை என்றும், “தமிழக அரசிடமிருந்து பார்ம் “என்” லைசென்ஸ் பெற்று, தியேட்டர்கள் நடத்துவதற்காக ஜாஸ் சினிமாஸ் கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுள்ளது” என்றும் “கிளாசிக் மால் நிறுவனம்” 11 திரையரங்குகள் கை மாறியதைப் பற்றி தெளிவில்லாத ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
கிளாசிக் மால் நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து நமக்கு எழுந்துள்ள சில சந்தேகங்கள் வருமாறு :-இந்த அறிக்கையிலே கூறப்படும் 11 தியேட்டர்களையும் விலைக்கோ அல்லது வாடகைக்கோ பெற்ற ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் யார்?
பதினோரு தியேட்டர்களையும் வாங்கியவர்கள் மீது தான் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதற்கு தியேட்டர்களை வாங்கியவர்கள் தான் பதில் கூற வேண்டும். அல்லது அவர்களைப் பக்கத்திலேயே, தான் வாழ்ந்து வரும் வீட்டிலேயே நீண்ட காலமாக வைத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதா பதில் கூற வேண்டும். அவர்கள் பதில் எதுவும் இதுவரை கூறாமல் இருப்பதிலிருந்தே, சந்தேகம் உறுதியாகிறதா? அல்லவா? பொதுமக்கள் பார்வை யிலிருந்து எதையோ மறைப்பதற்கான முயற்சி நடப்பதாகத் தானே எவரும் எண்ணுவர்!
தற்போது பதில் அளித்துள்ள கிளாசிக் மால் நிறுவனம், “தமிழக அரசிடம் இருந்து “பார்ம் என் லைசென்ஸ்” பெற்று, தியேட்டர்களை நடத்துவதற்காக வாடகைக்குக் கொடுத்திருப்பதாகக்” கூறியிருக்கிறார்களே, தமிழக அரசிடம் இருந்து பார்ம் என் லைசென்ஸ் அவர்களுக்கு நேரடியாகக் கிடைக்கவில்லையா?
அதன் காரணமாகத் தான் ஜாஸ் நிறுவனத்திடம் தியேட்டர்களைக் கொடுக்க வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு ஏற்பட்டதா? ஜாஸ் நிறுவனத் திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குத்தகைத் தொகை எவ்வளவு?
தமிழக அரசிடமிருந்து “ பார்ம் என் லைசென்ஸ்” கேட்டு எப்போது விண்ணப்பிக்கப்பட்டது? அந்த உரிமத்தை வழங்காமல் அரசு பல நாட்கள் இழுத்தடித்தது என்பது உண்மையா? இல்லையா? தியேட்டர்களுக்கான அனுமதி தமிழக அரசிடமிருந்து எப்போது கிடைத்தது?
முதன் முதலில் இந்தச் செய்தியை வெளியிட்ட “இந்து” , “பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியிலே உள்ள திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகத் தானே செய்தி வெளியிட்டது. அந்த சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கும், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கும் என்ன தொடர்பு? சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து, திரையரங்கம் நடத்தும் உரிமையை ஜாஸ் நிறுவனம் பெற்றதா? அல்லது பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி நிறுவனத்திடமிருந்து அவர்கள் அறிக்கையிலே சுட்டிக்காட்டியிருப்பது போல நேரடியாகப் பெற்றதா?
லக்ஸ் எனப்படும் 11 திரையரங்குகளுக்கு 2014 மார்ச் மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுவது உண்மை என்றால்; 2014 மார்ச் மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை அந்த 11 திரையரங்குகளை நடத்திக் கொண்டிருந்தது யார்? சத்யம் சினிமாஸ் நிறுவனம் தானே? அதை ஏன் மறைக்கிறீர்கள்?
2013 செப்டம்பர் மாதத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததே; அந்த வழக்கின் அடிப்படையில் தான் தற்போது, சத்யம் சினிமாஸ் நிறுவனம் மிரட்டப்பட்டு, இந்த
11 திரையரங்குகள் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனவா? சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? அதற்கான பணம் எங்கிருந்து, யாரால், கிடைத்தது?
“பி.வி.ஆர். சினிமா நிறுவனம், சத்யம் சினிமா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க முயற்சித்தாக “இந்து” ஆங்கில நாளிதழ் முதன் முதலாகச் செய்தி வெளியிட்டிருந்ததே, அந்த பி.வி.ஆர். நிறுவனத்திற்குச் சொந்தமான திரையரங்குகளுக்கு அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் போடப்பட்டது எப்போது? அதற்கு அனுமதி வழங்கப்பட்டாகி விட்டதா? எப்போது? வழங்கப்படவில்லை என்றால், அவர்கள் அவற்றை விற்பதற்கு முன் வராதது தானா?
“ஜாஸ்” நிறுவனத்தின் உயர் பொறுப்பிலே இருப்பவர் சாட்சாத் இளவரசி யின் மகன் விவேக். அவர் நிர்வாகத்திலே உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால் அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது?
“ஜாஸ்” சினிமா நிறுவனம், கோவை - பீளமேடு பாங்க் ஆப் இந்தியா வங்கி யிலிருந்து, 2015 ஜனவரியில், 42 கோடியே 50 இலட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில், “லுhக்ஸ்” திரையரங்குகளில் உள்ள புரஜக்டர், ஃபர்னிச்சர், ஏர் கண்டிஷனர்கள், ஆகியவற்றை கடனுக்கு அடமானமாகக் காட்டியிருக்கிறார்கள். தியேட்டர்களை விலைக்கு வாங்காமல், ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு மட்டுமே எடுத்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனம், திரையரங்குகளில் உள்ள தளவாடங்களைக் காட்டி, நாட்டுடைமை யாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற முடியுமா?
“கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்” என்பார்கள்; இவர்களின் புளுகு மூட்டையை எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும் என்பது போகப் போகத் தான் தெரியும்!
இங்கே குறிப்பிட்டுள்ள கேள்விகள் அனைத்திற்கும் முறையான முழுமையான பதில் விளக்கங்கள் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கும் வரை, பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள ஆழமான அய்யப்பாடுகள் அகலாது! மேலும் மத்திய அரசு தன்னுடைய உளவுத் துறை மூலம் இந்தத் தியேட்டர்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து வைத்திருப்பதாகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அது உண்மையானால், மத்திய அரசு அந்த ஆவணங்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கு உரிய நேரம் வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக வெளியிட்டு விபரங்களைத் தெரிவிப்பதோடு; மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, ஆகியவற்றின் மூலம் விசாரணை செய்து வழக்கு தொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான், “நீதியை எப்போதும் நிலைநாட்டு வோம்” என்று பா.ஜ.க. அரசு உரிமை கொண்டாடுவதற்கு ஓரளவேனும் பொருள் இருக்க முடியும். இல்லாவிட்டால் “நடப்பதெல்லாம் வெளிப் பகட்டு; சொல்லப் போனால் வெட்கக் கேடு!” என்று தான் நாட்டு மக்கள் நினைப்பார்கள்!’’
Comments