பாடகர் கோவனை போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய தமிழக அரசு மனு சுப்ரீம் கோர்ட்டில் டிஸ்மிஸ்!!

SC dismisses TN appeal on police custody to Singer KovanOneIndia News : டெல்லி: மதுவிலக்கை வலியுறுத்தி பாடியதால் தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீன் விடுதலையான ம.க.இ.க. பாடகர் கோவனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்துள்ளது. இடதுசாரி அமைப்பான ம.க.இ.க.வைச் சேர்ந்த பாடகர் கோவன் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாடியலில் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஜாமீன் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே கோவனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணையின் போது போலீசாரால் கோவன் மீதான தேசதுரோக வழக்கு ஏன் என்பதை விவரிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து போலீசாரின் கோரிக்கையை நிராகரித்து கோவனுக்கு ஜாமீன் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கோவன் ஜாமீனில் விடுதலையானார். மேலும் கோவனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோரும் தமிழக அரசின் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே பாடகர் கோவனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தது. இதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்வழக்கை விசாரிக்க எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனக் கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

Comments