நதிகள் இணைப்பு திட்டம் தாமதத்தால் ஏராளமான தண்ணீர் வீணடிப்பு: கிடப்பில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம்
காவிரி ஆற்றில் உபரி நீரை வீணாக்காமல் இருக்கும் வகையில், தேசிய மேம்பாட்டு முகமை, உள்நாட்டு நதிகள் இணைக்கும் திட்டத்தில், 254 கோடி ரூபாய் மதிப்பில், கரூர் மாவட்டம் மாயனுார் காவிரியில்தடுப்பணை கட்டியது. இந்த தடுப்பணையில், 1.05 டி.எம்.சி., தண்ணீரை தேக்கமுடியும்.தடுப்பணையின் மேற்கு பகுதியில் உள்ள கட்டளை படுகை அணையில் இருந்து பிரிந்து செல்லும் தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ண ராயபுரம் வாய்க்கால், புதுகட்டளை மேட்டுவாய்க்கால் ஆகிய நான்கு பாசன வாய்க்கால்கள், நேரடியாக பாசன வசதி பெறுவதோடு, கிணற்று பாசனங்களும் பயனடைகின்றன.
திட்டம் எங்கே?
மாயனுார் காவிரியின் குறுக்கே உள்ள தடுப்பணையின் மேற்புறத்தில் இருந்து, குண்டாறு வரை, இணைப்பு கால்வாய் அமைக்க, 5,500 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.வாய்க்கால் மூலமாக சிற்றாறுகளான, அரியாறு, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, கிருதுமால் நதிமற்றும் குண்டாறு ஆகியவற்றை இணைக்கும் போது காவிரி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி வெள்ள நீரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.திட்டத்தை செயல்படுத்தும் வகையில், காவிரியில் இருந்து, தெற்கு வெள்ளாறு வரை, வாய்க்கால் நேர்பாடு ஆய்வு செய்து, மதிப்பீடு தயாரிக்கும் பணி, கடந்தாண்டு நடந்தது.திட்ட வரைவு முழுமைப்பெற்ற பிறகும், திட்டத்துக்கான நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. மாநில அரசும் இவ்வளவு தொகையை ஒதுக்கீடுசெய்ய முடியாது என கை விரித்தது; திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்நிலையில், தற்போது வடகிழக்குபருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் மழைநீர் அதிகளவில் செல்கிறது.இதன் காரணமாக மாயனுார்தடுப்பணையில், 1 டி.எம்.சி., தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் உபரி நீரை, அப்படியே வெளியேற்றப்படுவதால், வீணாக கடலில் கலக்கிறது.
நடவடிக்கை:
இதுகுறித்து, காவிரி- - வைகை- - குண்டாறு நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலர் அர்ச்சுனன் கூறியதாவது:காவிரி ஆற்றில் வரும் தண்ணீர், கொள்ளிடம் வழியாக வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடி நீர் வீணாகிறது. காவிரி- - குண்டாறுதிட்டத்தை செயல்படுத்தி இருந்தால், கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை வாய்க்கால் வழியாக திருப்பி விட்டிருக்கலாம்.கரூர், மதுரை, ராமநாதபுரம் வரைஏராளமான விவசாய நிலம் பயனடையும். இத்திட்டத்தை, விரைவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று நாளில் 7.5 டி.எம்.சி., தண்ணீர் வீண்:
கடந்த மாதம் வரை, தண்ணீரின்றி நெல் நாற்றுகள் கருகிய, கடலுார் மாவட்டத்தில், மூன்றே நாளில், 7.5 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணாகியுள்ளது. டெல்டா பாசனத்திற்காக, கடந்த ஜூன் மாத இறுதியில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, டெல்டா பகுதியின் கடைமடை பகுதியான கடலுார் மாவட்டத்திற்கு, ஆகஸ்ட், 28ம் தேதியன்று, கீழணையில் இருந்தும், செப்டம்பர், 4ம் தேதியிலிருந்து, வீராணத்தில் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.போதிய தண்ணீர் திறந்து விடப்படாத தால், பயிரிடப்பட்டிருந்த நெல் நாற்றுகள் கருக துவங்கின. நாற்றுகளைக் காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறந்து விடக்கோரி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.அக்டோபர் முதல் வாரத்தில் பெய்த மழையைப் பயன்படுத்தி, கடைமடை விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்த நிலையில், கடந்த மாத இறுதியில் மழை பெய்யாததால், நாற்றைக் காப்பாற்றுவதற்கு, வீராணம் ஏரியிலிருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடுமாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடலுார் மாவட்டத்தில், 8ம் தேதி முதல், 9ம் தேதி இரவு வரை, மழை கொட்டியது. அதே போன்று, அருகாமையில் உள்ள அரியலுார் மாவட்டத்திலும் கனமழை கொட்டியது. கடலுார் மாவட்ட நீர்நிலைகளின் மட்டம் 'கிடுகிடு'வென உயர்ந்ததால், நீர்நிலைகளின் பாதுகாப்பு கருதி, வரத்து நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.பண்ருட்டி மற்றும் உளுந்துார்பேட்டை பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், கெடிலம் ஆறு வழியாக, வினாடிக்கு, 95 ஆயிரம் கனஅடி வீதம், ஒரே நாளில், 1 டி.எம்.சி., தண்ணீர் வங்கக் கடலில் கலந்துள்ளது. அரை டி.எம்.சி., தண்ணீருக்காக, கடலுார் மாவட்ட விவசாயிகள், கடந்த மாதம் வரை போராடி வந்த நிலையில், 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை, மூன்றே நாளில் மாவட்டத்தில், 7.5 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இந்த தண்ணீர், சென்னை நகரின், 10 மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்.
Comments