"அண்ணன்" அடிச்சது ஆசிர்வாதம்... சிலிர்த்தபடி கூறும் சிவக்கொழுந்து!

OneIndia News : பண்ருட்டி: விஜயகாந்த் சரமாரியாக அடி அடி என்று அடித்த விவகாரம் குறித்து பண்ருட்டி தேமுதிக எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து கூறியுள்ளது சிலிர்க்க வைப்பதாக உள்ளது. அண்ணன் அடித்தது "ஆசிர்வாதம்" என்று சிம்பிளாக கூறி விட்டார் சிவக்கொழுந்து. சினிமாவில் நன்றாக நடித்த விஜயகாந்த் இப்போது நன்றாக அடிக்கவும் ஆரம்பித்து விட்டார். அவருக்கும், அடிக்கும் அப்படி ஒரு செம பொருத்தம் என்றாகி விட்டது. அவர் அடிக்காவிட்டால்தான் அது செய்தி என்ற அளவுக்கு நிலைமை உள்ளது. அவரது கோபத்தையும், கொந்தளிப்பையும் மட்டுப்படுத்த என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். யோகா முகாமுக்கும் கூட அனுப்பி வைத்து பார்த்தனர். ஆனால் போய் விட்டு வந்த கையோடு அடிதடியில் அவர் இறங்கியிருப்பது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டு பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் விஜயகாந்த். பின்னர் பிரசார வேனில் ஏறினார். அவருடன் பண்ருட்டி தேமுதிக எம்.எல்.ஏ. பி.சிவக்கொழுந்து நின்று இருந்தார்.

வேனை சுற்றி தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்றனர். விஜயகாந்த்திடம் பேசும், பார்க்கும் ஆவலால் அவர்கள் நகரவில்லை. இதனால் விஜயகாந்த் வேன் புறப்பட முடியவில்லை. வழி விடுங்கள் என விஜயகாந்த் சைகை காட்டியும் கூட்டத்தினர் நகரவில்லை.

இதனால் ஆவேசம் அடைந்த விஜயகாந்த் தனது அருகில் நின்று இருந்த சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.வை திடீரென பளார் பளார் என அடிக்க ஆரம்பித்தார். நாலு அடி விழுந்து விட்டது. இதை சிவக்கொழுந்து மட்டுமல்லாமல் அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.

சிவக்கொழுந்து கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படாமல் விஜயகாந்த்திடம் அடி வாங்கியபடி நின்றார். அத்தோடு நிற்காத விஜயகாந்த், தனது காலால் டிரைவரா மிதித்து சீக்கிரம் வண்டியை எடு என்று உத்தரவிடவே டிரைவர் பயந்து போய் வேகமாக வண்டியை எடுத்தார்.

இதுகுறித்து சிவக்கொழுந்து கருத்து தெரிவிக்கையில், விஜயகாந்த் மட்டுமே இயல்பான தலைவர். மக்களை பற்றி சிந்திப்பவர். மனதில் பட்டதை சொல்பவர். தவறு என்று நினைத்தால் அதை செய்தவர் யார் என்று பார்க்காமல் கண்டிப்பார்.

நிவாரண உதவி வழங்கிய இடத்தில் விஜயகாந்த் பிரசார வேன் முன்பு கட்சி தொண்டர்கள் முண்டியடித்து நின்றனர். இதனால் விஜயகாந்தால் மக்களை பார்க்க முடியவில்லை.

அந்த கோபத்தில் அருகில் இருந்த என்னை அழைத்து முதுகில் அறைந்தார். நான் குனிந்து கொண்டேன். மாவட்ட செயலாளரான நானே கட்சியினரை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று கண்டித்தார். அவர் சொன்ன பிறகே தவறை உணர்ந்தேன். முறையாக ஏற்பாடு செய்யாததால் அவர் தண்டனை கொடுத்தார்.

அவரிடம் அடி வாங்கியதற்காக வருத்தப்படவில்லை. தலைவர் கையால் அடி வாங்குவது அவர் ஆசிர்வதிப்பது மாதிரி தான். அவருடன் நெருக்கமாக இருப்பதாகவே இதை நினைக்கிறேன் என்றார்.

ஏற்கனவே 2006 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது நெல்லிக்குப்பத்திலும், 2011 சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது விருத்தாசலத்திலும் சிவக்கொழுந்து, விஜயகாந்திடம் அடிவாங்கியுள்ளாராம். இது அவருக்கு 3வது அடியாம். அப்பச் சரி.. பழகிப் போயிருக்கும் போல!

Comments