OneIndia News : சென்னை: லட்சத்தீவில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால்,சென்னை மற்றும் கடலூர் உட்பட பல வட மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
மழையால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் சரிவர தணியாத நிலையில்,மீண்டும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை,மற்றும் வேலூர் மாவட்டங்களில் மழை பெய்து வருவதாகவும்,நாகை,காரைக்கால் மற்றும் புதுவையில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்த வரை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மற்றும் கோட்டூர்புரத்தில் காலையில் சாரல் மழை பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், "மேலடுக்கு சுழற்சியானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றார். அதேவேளையில் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்துவிட்டது என்றும் ரமணன் கூறியுள்ளார்.
Comments