இந்தியாவுக்குப் போக வேண்டாம் என நாங்கள் கூறவே இல்லை.. ரஷ்யா மறுப்பு

Never said India removed as safe travel destination: RussiaOneIndia News : பனாஜி: இந்தியா சுற்றுலா செல்வதற்குப் பாதுகாப்பு இல்லாத நாடு என்று நாங்கள் ஒருபோதும் அறிவிக்கவில்லை. இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று ரஷ்ய நாட்டவருக்கு நாங்கள் அறிவுறுத்தவும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. சுற்றுலா செல்வதற்குப் பாதுகாப்பான பகுதிகள் என்ற பட்டியலிலிருந்து இந்தியாவின் பெயரையும், அதேபோல கோவா மாநிலத்தின் பெயரையும் ரஷ்யா நீக்கியதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதை தற்போது ரஷ்யா மறுத்துள்ளது.

இதுதொடர்பாக தாங்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கோவாவில் உள்ள ரஷ்ய செய்தி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பனாஜியில் உள்ள ரஷ்ய செய்தி மையத்தின் தலைரான எகதரீனா பெலியகோவா விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவை பாதுகாப்பான நாடுகள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக எந்தத் தகவலையும் ரஷ்யா வெளியிடவில்லை. மேலும் இந்தியாவை பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலிலும் சேர்க்கவில்லை. அதுபோல வெளியான செய்தி தவறு என்று அவர் கூறியுள்ளார். கோவாவில் உள்ள ரஷ்ய செய்தி மையமானது, ஆயிரக்கணக்கான ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு தகவல் மையமாக விளங்கி வருகிறது. கோவாவுக்கு ஆண்டுதோறும் வருகை தரும் ரஷ்யர்களுக்கு இது உதவி வருகிறது. முன்னதாக கோவா மாநிலத்தை கருப்புப் பட்டியலில் ரஷ்யாவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் கோவா மையம் தற்போது இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. கோவாவுக்கு ஆண்டுதோறும் 3 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்ககளில் ரஷ்யர்கள் எண்ணிக்கை தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது இடத்தில் இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இருப்பினும் ரஷ்யாவில் தற்போது பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டிருப்பதாலும் சிரியப் போரில் ரஷ்யா இறங்கியிருப்பதாலும், இந்த ஆண்டு ரஷ்யர்கள் வருகையில் குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவை, குறிப்பாக கோவாவை கருப்புப் பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளதாக செய்தி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Comments