அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., 'ஆப்சென்ட்'

தினமலர் செய்தி : குளிர்கால கூட்டத் தொடரில், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள விஷயங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய அரசு கூட்டியிருந்த, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பார்லி மென்ட்டின், மூன்றாவது பெரிய கட்சியான, அ.தி.மு.க., சார்பில் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.

சம்பிரதாய கூட்டம்:

பார்லிமென்ட்டின் கூட்டத்தொடர் துவங்கும்முன், லோக்சபா சபாயகர்தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கும். அதில், லோக்சபா கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்வர். அது, வெறும் சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் கூட்டம் மட்டுமே. ஆனால், மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும், அனைத்துக் கட்சி கூட்டம் தான், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; இந்த கூட்டத்தில் தான், முக்கிய விவாதங்கள், நடக்கும். எந்தெந்த பிரச்னைகளை கிளப்புவது என்பது குறித்து, அரசும், அரசியல் கட்சிகளும், இக்கூட்டத்தில் தான் முடிவு செய்யும். ராஜ்ய சபா தலைவர், தனியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது இல்லை. இதனால், மத்திய அரசு கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தான், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கட்சித் தலைவர்கள் பங்கேற்க முடியும்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு, பார்லிமென்ட் வளாக அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழக கட்சிகளில், தி.மு.க., மட்டுமே கலந்து கொண்டது. 

அதில், அக்கட்சியின், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, “தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு, வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அலட்சியம் காட்டாமல், விரைந்து செயலாற்ற வேண்டும்; கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும்,” என, பேசினார். 

பார்லிமென்ட்டில், மூன்றாவது பெரிய கட்சியான, அ.தி.மு.க., சார்பில், இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.,வுக்கு, லோக்சபாவில், 37 எம்.பி.,க் களும், ராஜ்யசபாவில், 12 எம்.பி.,க்களும், உள்ளனர்; இவர்களில், ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.

ஆசி பெற...:

இது குறித்து விசாரித்த போது, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக, லோக்சபா அ.தி.மு.க., தலைவர் வேணுகோபால், செவ்வாய் மாலையே, டில்லிக்கு வந்து விட்டார். அதே போல, ராஜ்யசபா, அ.தி.மு.க., தலைவர் நவநீதகிருஷ்ணனும், அன்று மாலையே டில்லி வர திட்டமிட்டிருந்தார்.ஆனால், புதிதாக நியமிக்கப்பட்ட, அ.தி.மு.க., தலைமை கழக நிர்வாகிகள், சென்னையில், புதன்கிழமை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து ஆசி பெறுவதாக வந்த தகவலையடுத்து, டில்லிக்கு கிளம்ப வேண்டிய நவநீதகிருஷ்ணன், விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பி விட்டார். டில்லிக்கு, ஏற்கனவே வந்துவிட்ட வேணுகோபால், உடனடியாக, அன்றிரவே சென்னைக்கு திரும்பி விட்டார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள், தெரிவித்தன.

Comments