வெள்ளநீருடன், கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பூச்சிகள், புழுக்கள் படையெடுப்பதால் குடியிருப்புவாசிகள் அக்கம் பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடும் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா உள்ளிட்டோர் வெள்ளநீரை வெளியேற்றவும், நிவாரணப்பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.
மழை விட்டாலும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. வியாசர்பாடி ரயில்வே பாலத்துக்கு கீழே கழுத்தளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதை கடக்க முடியாமல் மக்கள் நீந்தி செல்கின்றனர். இருச்சக்கர வாகனங்களை மீன்பாடி வண்டிகளில் ஏற்றி அந்தப்பகுதியை கடக்கின்றனர். குழந்தைகளும், பெண்களும் அந்தப்பகுதியை கடக்க முடியாமல் தவித்தனர். போக்குவரத்தும் அந்தப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக வெள்ளம் தேங்கியதால் சரியான நேரத்துக்கு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். சென்னை நகரத்தில் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது பெருமழை. பிசியான கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. பலர் விடுமுறை எடுத்து வீடுகளிலேயே முடங்கி விட்டனர்.
மழை வெள்ளத்துக்கு அரித்துச் செல்லப்பட்ட சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களில் வாகனங்கள் சிக்கின. சென்னையில் பெரும்பாலான சாலைகள் செல்லரித்து காணப்படுகின்றன. குண்டும், குழியுமான சாலைகளில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் சிலர் விழுந்து எழுந்து செல்கின்றனர். இந்த காட்சிகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
வடசென்னையில் வெள்ளநீர் தேங்குவது ஒருபுறம் இருக்க தென் சென்னையில் வேளச்சேரி, புழுதிவாக்கம், மடிப்பாக்கம் என அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம் எப்போ வடியுமோ? என்று காத்திருக்கின்றனர் சென்னைவாசிகள். மிதக்கும் சென்னையை ஊடகங்களில் பார்ப்பவர்கள்தான் எவ்ளோ தண்ணீ பாரேன் என்று ஆச்சரியப்படுகின்றனர்.இதை விட பெரிய வெள்ளமெல்லாம் சென்னையில வந்திருக்கு மவுண்ட்ரோடுல போட்டு விட்டவங்க நாங்க என்று சமூக வலைத்தளங்களில் பெருமை பேசிக்கொள்கின்றனர் சென்னைவாசிகள்.
கழிவு நீர் செல்லக்கூடிய கால்வாய்களில் மழை நீர் புகுந்ததால் பலப்பகுதிகளில் தூர்நாற்றம் வீசுகிறது. இதை நிலை நீடித்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. டெங்கு, காலரா ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்றும் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். நாலு நாட்கள் மழைக்கே இப்படி நாறிப்போச்சே... இனி வரப்போகிற மழையை எப்படி சமாளிக்குமோ மாநகராட்சி, என்று நினைத்தே பலருக்கும் காய்ச்சல் வந்துவிட்டது.
Comments