OneIndia News : கடலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய நிவாரண அரிசியில் புழுக்கள் நெளிவதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, கடந்த 9ம் தேதி கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழைக்கு கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. கால்நடைகள் ஆங்காங்கே செத்து மிதக்கின்றன. ஏராளமான சடலங்களும் ஆங்காங்கே கிடப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். பேரிடர் மீட்புப்பணியினரும் கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை முடுக்கி விடுவதற்காக நேற்று தலைமை செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை கூட்டம் நடத்தினார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஏ.ஜெயபால், ஆர்.வி.உதயகுமார் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோரை கடலூருக்கு அனுப்பி வைத்தார். வியாழக்கிழமையன்று அமைச்சர்கள் குழு கடலூர் வந்து, மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கெடிலம் ஆற்று நீர் உள்ளே புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புருஷோத்தமன் நகர் பகுதி மக்கள் தங்கியுள்ள கே.என்.சி கல்லூரியில் சந்தித்த அமைச்சர்கள் ஆறுதல் கூறினார்கள். பின்னர், அமைச்சர் குழுவின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி பைகளையும், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார். அதை வாங்கிய பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து, அந்த அரிசி பையை திறந்து பார்த்தபோது, அரிசிக்குள் ஏராளமான புழுக்கள் இருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், "இது எங்களுக்கு எதுக்கு? தேவையில்லை நீங்களே எடுத்து கொண்டு போங்க என்று கட்சிக்காரர்களிடம் அரிசி பைகளை திருப்பி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் அதிமுகவினருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி உணவின்றி தவிக்கும் மக்களுக்கு புழுக்கள் இருந்த அரிசி கொடுத்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments