இந் நிலையில் சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், வங்கக்கடலில் தெற்கு ஆந்திராவை ஓட்டி நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மறைந்து விட்டது. உள் மாவட்டங்களில் நிலவிய மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும். கோவை, ஊட்டி, வால்பாறை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம். தற்போது லட்சத்தீவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் உள்ளது. அரபிக்கடலில் இந்த நிகழ்வு இருந்த போதிலும் வங்கக்கடலில் உள்ள ஈரக்காற்றை தமிழகம் ஊடாக உள் வாங்கும். அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை 44 செ.மீ. ஆனால் 39.3 செ.மீ. மழை இப்போதே பெய்துவிட்டது. இந்த ஆண்டு சராசரியாக பெய்யக்கூடிய மழையைவிட சற்று கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம்: சங்கரன்கோவில் 14 செ.மீ ராஜபாளையம் 13 செ.மீ ராதாபுரம், பாளையங்கோட்டை, ஆயிக்குடி தலா 10 செ.மீ உத்தமபாளையம், கூடலூர் தலா 9 செ.மீ குளச்சல், பேச்சிப்பாறை, சிவகிரி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 6 செ.மீ நாகர்கோவில், மைலாடி, பேரையூர், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, வாடிப்பட்டி தலா 5 செ.மீ. செங்கோட்டை, கன்னியாகுமரி, தக்கலை, வால்பாறை தலா 4 செ.மீ. போடிநாயக்கனூர், சிவகாசி, சாத்தான்குளம், மரக்காணம், திருவள்ளூர் தலா 3 செ.மீ. பூந்தமல்லி, கொடைக்கானல், பாபநாசம், குழித்துறை, வானூர், இரணியல், தூத்துக்குடி தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
Comments