இவ்வளவு மழை பெய்தும் இயல்பை எட்டவில்லை

தினமலர் செய்தி : சென்னை : விடாது பெய்த கனமழையால், சென்னை உட்பட, பல மாவட்டங்கள் தத்தளிக்கின்றன. இதில் இருந்து மீளும் வகையில், 'தமிழகத்தில் கன மழை குறையும். ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும். திருவள்ளூர் மாவட்டத்தில், கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்களில், அதிக அளவில் மழை பெய்தும், வழக்கமான அளவை, தமிழகம் இன்னும் எட்டவில்லை.

வெள்ளத்தில்...:

தமிழகத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட வட மாவட்டங்கள், வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சென்னையில், திருநீர்மலை, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மணப்பாக்கம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குடியிருப்புகளில் பலர் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டோருக்கு, ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த சூழலில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காலை, 8:30 மணி நிலவரப்படி, தெற்கு ஆந்திரா, வட தமிழகம் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு 
பகுதியாக நீடிக்கிறது. அது மேலும், வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பதிவாகிஉள்ளது.அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

கடல் கொந்தளிப்பு:

வட தமிழக கடலோரங்களில், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில், பெரு வெள்ளம், பெரு மழைக்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா சென்றதால், தமிழகத்திற்கான பாதிப்பு வெகுவாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறைவதால், மீட்புப்பணிகளை தீவிரப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மழை விட்டாலும், மீட்புப்பணிகள் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வர, ஒரு வாரத்திற்கு மேல் ஆகும்.

மழை எவ்வளவு?

திருத்தணி - 9; சோழவந்தான் - 8; பள்ளிப்பட்டு, சித்தம்பட்டி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதுார் - 7; காட்டுக்குப்பம், செங்கல்பட்டு - 6; பூந்தமல்லி, வாடிபட்டி - 5; சிவகங்கை, மதுரை, திருவாடனை, சென்னை விமான நிலையம், எண்ணுார், தாமரைப்பாக்கம் - 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மூன்று மாதங்களில், வட கிழக்கு பருவ மழை இயல்பு அளவாக, 44 செ.மீ., பதிவாக வேண்டும். நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் சராசரி மழை அளவு, 0.5 செ.மீ., பதிவாகியுள்ளது. அக்., 28 முதல், 38.8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இன்னும், 5.2 செ.மீ., மழை வந்தால் வழக்கமான அளவை எட்டி விடும்.

Comments