முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு, விலையில்லா மின்விசிறி, கிரைண்டர் மற்றும் மிக்சியை வழங்கி வருகிறது. ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ள இந்த மின்விசிறிகளை, சில இடைத்தரகர்கள், சேலம், அந்தியூர், பவானி சாகர், கோயம்புத்துார் உட்பட பல இடங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து, கர்நாடகாவில் விற்கின்றனர். கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், ஹனுாரு, மங்கலா, மார்ட்டள்ளி, ராமாபுரா, லொக்கன ஹள்ளி, கொள்ளேகால், ஷாக்யா, காமகெரெ உட்பட பல இடங்களில், கடந்த ஒரு வாரமாக, இந்த, 'அம்மா' மின்விசிறிகள் விற்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மின்விசிறியும், 500 முதல், 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
படித்தவர்கள் இந்த மின்விசிறிகளை வாங்குவதில்லை; மாறாக, 'அரசின் திட்டத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள்' என, இடைத்தரகர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர்.இதற்கு முன், தமிழக அரசு ஏழைகளுக்காக, இலவச தொலைக்காட்சி பெட்டியை வழங்கியது. அப்போதும், இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து, தமிழக எல்லையை ஒட்டிய கர்நாடக மாவட்டங்களில், 1,000 முதல், 1,500 ரூபாய் வரை விற்று லாபம் சம்பாதித்தனர்; இப்போது மின்விசிறிகளை விற்கின்றனர். பெங்களூரிலும், சில இடங்களில் இத்தகைய மின்விசிறிகளை பார்க்க முடிகிறது; கேட்டால், 'எங்கள் உறவினர் கொடுத்தனர்' என்கின்றனர்.
Comments