நீர்நிலைகளை தூர்வார மறந்ததால் வெள்ள பாதிப்பை சந்திக்கும் மக்கள்

தினமலர் செய்தி : கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை துார்வாராத காரணத்தால், விவசாயம் அழிவை சந்திப்பதுடன், மக்கள் ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது என, விவசாயிகள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். 

நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனாமி, தானே புயல், பருவம் தவறிய மழை, அதிக வெயில், கனமழை, மூடுபனி போன்றவைகளால் பிரதான தொழிலான விவசாயம் பாதிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும், மழை வெள்ளத்தால், பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெய்த கனமழையாலும், விவசாய பயிர்கள் நாசமடைந்துள்ளன. 

கடலுார் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழையளவு 131.59 செ.மீ., மழை காலம் முடிவதற்கு இன்னும், 40 நாட்கள் உள்ள நிலையில், மாவட்டத்தில், இதுவரை, 115 செ.மீ., மழை பெய்துள்ளது. ஆனால், பெய்த மழை நீரை சேமிக்க முடியாமல், 7.5 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணாகி விட்டது. இது, ஒரு புறமிருக்க, ஒரே நாளில், 35 -- 48 செ.மீ., மழை பெய்ததால் தான் அதிக பாதிப்பு என, அதிகாரிகள் தரப்பில் செல்லப்படுகிறது. நம்மைவிட அதிகளவில் மழை பெய்யும் நாடுகளில், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாவண்ணம் வடிகால் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டில் மட்டும், இந்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளன. 

மழை காலத்தில், சாலை மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கடலுார் - சிதம்பரம் சாலையில் மேட்டுப்பாளையம், வடலுார் அருகே மருவாய் ஆகிய இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இது, காலம் காலமாக நடக்கின்ற நிகழ்வாக உள்ளதே தவிர, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, எந்த ஆட்சியாளர்களும் முன்வருவதில்லை. கடலுார் மாவட்டத்தில், 217 பொதுப்பணித்துறை ஏரிகள், 2,657 குளங்கள், 1,687 நீர்வரத்து வாய்க்கால்கள் உள்ளன. இவைகளெல்லாம் துார்ந்து பாதி கொள்ளளவைக்கூட எட்ட முடியாத நிலையில் உள்ளன. 

அதாவது, ஏரிகளின் நீர் வெளியேற்று பகுதியில் மட்டும் தான், முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பதாக தெரியும். ஆனால், ஏரிக்குள் மண்மேடு தான் இருக்கும். இதனால், ஏரிகளில் போதியளவு தண்ணீரை பிடிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வரத்து வாய்க்கால்கள் துார்வாரப்படாமல், ஆகாயத் தாமரை நிறைந்து, குப்பை மேடாகி ஆக்கிரமிப்பில் உள்ளதால், அதிகளவில் வெள்ளம் வரும்போது, வாய்க்கால் வழியாக செல்லாமல், ஊருக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இதுகுறித்து, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்டச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறியதாவது: கடலுார் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. சேலம், நாமக்கல், அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட்டங்களில் பெய்யும் மழையால் பெருக்கெடுக்கும் தண்ணீர், கடலுார் மாவட்டம் வழியாக தான் கடலில் வடிகிறது. கடலுார் மாவட்டத்தின் வழியாக தென்பெண்ணை, கெடிலம், மணிமுத்தாறு, பரவனாறு, வெள்ளாறு போன்ற ஆறுகள் ஓடுகின்றன. மேலும் பாசிமுத்தான் ஓடை, சித்தோடை, கான்சாகிப் வாய்க்கால் இவற்றில் உள்ள ஆக்கிரமிப்புக்கள், ஆகாயத்தாமரை படர்வு குப்பைகளால் துார்ந்து விட்டதால், உபரிநீர் வடிய வழியில்லாமல் ஊருக்குள் வெள்ளம் பாய்கிறது. இதற்கு நிரந்தர திட்டமே இல்லாமல் உள்ளது. இவற்றை துார்வாருவதற்காக, 2,300 கோடி ரூபாயை ஒதுக்கி, முழு அளவில் துார்வாரும் பணியை மேற்கொண்டால் தான், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தடுக்க முடியும். இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.

Comments