அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் தெரிவித்த தம்பதிக்கு அதிமுகவிலிருந்து ஜெ. கல்தா

Couple sacked from ADMK after complaining about minister Vijaya BhaskarOneIndia News : புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கட்சியில் இருந்து  நீக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாள், அவரது கணவரும் கருப்பட்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான சொக்கலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் சிலர் சேர்ந்து கடந்த 25ம் தேதி விராலிமலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் விஜயபாஸ்கரை சந்தித்து தாய், சேய் நலவிடுதி அமைத்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது விஜயபாஸ்கர் அவர்களை ஜாதி பெயரை கூறி இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பாக முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 5ம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் குதித்த அவர்கள் அதிமுக அலுவலகம் மீது கற்களை வீசித் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம் நடந்த மறுநாள் அமைச்சர் பூனாட்சி அதிமுகவில் இருக்கும் முத்தரையர் சங்கத்தினர், எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டத்தை கூட்டினார். கூட்டத்திற்கு வந்த கெங்கையம்மாளும், அவரது கணவரும் விஜயபாஸ்கர் கூறியதை எல்லாம் தெரிவித்தனர். இது குறித்த விசாரணை அறிக்கை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கெங்கையம்மாளையும், அவரது கணவரையும் கட்சியில் இருந்து நீக்கி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

Comments