மதுரை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், நடப்பு ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், மதுரை - மணியாச்சி - துாத்துக்குடி; மணியாச்சி - நாகர்கோவில் என, இரண்டு திட்டங்களாக பிரித்து அறிவிக்கப்பட்டது. 'எக்ஸ்ட்ரா பட்ஜெட் ரிசோர்சஸ்' என்ற பெயரில், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் இந்த திட்டங்களுக்கு நிதி திரட்டப்படும் என, அப்போது கூறப்பட்டது.ரயில்வே வாரியம் கேட்டு கொண்டதன் படி, பொதுத்துறை நிறுவன நிதியில், நாடு முழுவதும் செயல்படுத்த உள்ள, 77 திட்டங்களின் மதிப்பீடு மற்றும் விரிவான திட்ட அறிக்கை, ஆகஸ்டில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில், தெற்கு ரயில்வேக்கு, இரண்டு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
* மதுரை - மணியாச்சி - துாத்துக்குடி திட்டம்; 159 கி.மீ., - 1,200 கோடி ரூபாய்
* மணியாச்சி - நாகர்கோவில் திட்டம்; 100 கி.மீ., - 800 கோடி ரூபாய். இந்த அறிக்கையை ரயில்வே வாரியம், 'நிடி ஆயோக்' அமைப்பிற்கு அனுப்பவில்லை; மூன்று மாதமாக, முடங்கி உள்ளது.
தமிழக அரசு ஆர்வமில்லை:
தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: மற்ற மாநிலங்கள், ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க ஏதுவாக, தாங்களும் முதலீடு செய்கின்றன. ஆனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை. குறைந்த பட்சம், தமிழக எம்.பி.,க்களாவது அழுத்தம் கொடுத்து, முக்கிய ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ரயில்வே வாரியத்திடம் இருக்கும் திட்ட அறிக்கையை, 'நிடி ஆயோக்' அமைப்பிற்கு விரைந்து அனுப்ப, தமிழக எம்.பி.,க்கள், ரயில்வே அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Comments