மேகி நூடுல்சை தொடர்ந்து பாஸ்ட்டாவுக்கும் வருகிறது சிக்கல்

தினமலர் செய்தி : லக்னோ: மேகி நூடுல்சை தொடர்ந்து நெஸ்லே நிறுவனத்தின் பாஸ்ட்டா உணவு வகையும் பாதுகாப்பற்றது என சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாஸ்ட்டா விற்பனைக்கும் விரைவில் தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடில்சில் நிர்ணயித்த அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து பல மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு நெஸ்லே நிறுவனம் சமீபத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனையை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், உத்திர பிரதேசத்தில் நெஸ்லே நிறுவனத்தின் விற்பனையாளர்களிடம் ஜூன் 10ம் தேதி பாஸ்ட்டா மாதிரிகள் பெறப்பட்டது.

இந்த பாஸ்ட்டா மாதிரிகள் லக்னோவில் உள்ள அரசு ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பலகட்ட சோதனைக்கு பிறகு, நெஸ்லே நிறுவனத்தின் பாஸ்ட்டாவில் காரீயம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து உ.பி., உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரி அரவிந்த் யாதவ் கூறுகையில், பொதுவாக காரீயம் சேர்க்கப்பட வேண்டிய அளவு 2.5 பிபிஎம்(பார்ட்ஸ் பெர் மில்லியன்). ஆனால், பாஸ்ட்டாவில் 6 பிபிஎம் இருந்தது சோதனையில் தெரியவந்தது. சோதனை அறிக்கை அடிப்படையில் மோடிநகரில் உள்ள நெஸ்லே நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், அது திரும்பி வந்து விட்டது என்றார்.

கோர்ட் மூலம் நடவடிக்கை

சோதனை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, பாஸ்ட்டா விற்பனைக்கு தடை கோரப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை அறிக்கை அடிப்படையில் பாஸ்ட்டா, பாதுகாப்பற்ற உணவு பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய குற்றச்சாட்டு குறித்து நெஸ்லே இந்தியா நிறுவனத்திடம் கேட்டதற்கு, பாஸ்ட்டா 100 சதவீதம் பாதுகாப்பானது. இந்த புதிய குழப்பத்தால் பாஸ்ட்டா தயாரிப்புக்களில் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை என்றும் நெஸ்லே கூறி உள்ளது.

Comments