இதற்கிடையில், பா.ஜ., மூலம், தே.மு.தி.க.,வை இழுக்கும் முயற்சியில், ஸ்டாலின் தரப்பு ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, பா.ஜ., தலைவர் அமித் ஷாவுடன் பேசும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:தே.மு.தி.க.,வுடன் நேரடியாகவே கூட்டணி பேச்சு நடத்தப்பட்டது. தி.மு.க., ஆதரவு பாதிரியார் ஒருவர் இதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை நான்கு முறை சந்தித்தார். ஆனால், விஜயகாந்த் ஒத்துவராததால், 'தமிழக நலனுக்காகவும், உங்கள் நலனுக்காகவும் தான் சொல்கிறேன். நீங்கள், இம்முறை தி.மு.க., கூட்டணியில் தான் இடம்பெற வேண்டும். இது தொடர்பாக, இனி சந்திக்க வர மாட்டேன்' என கூறி திரும்பிய பாதிரியார், அதன்பின், விஜயகாந்தை சந்திக்கவில்லை.
இதற்கிடையில், குஜராத் பா.ஜ., தலைவர் ரஜினிபாய் பட்டேல் மூலம், அமித் ஷாவுடன் தி.மு.க., தரப்பில் சிலர் பேசி வருகின்றனர். அப்போது, 'நீங்களே, 'டீல்' செய்து, விஜயகாந்தை, தி.மு.க., பக்கம் அழைத்து வாருங்கள்' என கூறியுள்ளனர். அதன் அடிப்படையில், பா.ஜ., தரப்பில் பிரேமலதாவிடம் பேசப்பட்டுள்ளது.அப்போது அவர், 'ஜெயலலிதாவை வீழத்த, தே.மு.தி.க., தயாராக உள்ளது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டுமானால், விஜயகாந்துக்கு துணை முதல்வர் பதவியும், அதற்கு ஏற்ப அதிக தொகுதிகளும் வழங்க வேண்டும்' என நிபந்தனை விதித்துள்ளார்.இவ்வாறு கட்சி வட்டாரம் கூறியது.
Comments