அதனைத் தொடர்ந்து கடந்த 30-ந்தேதி நள்ளிரவு திருச்சியில் வீட்டில் இருந்த போது கோவனை, சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் சென்னை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட கோவன், புழல் சிறையில் அடைக்கப் பட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் கோவனுக்கு ஜாமீன் வழங்கியது. அதனைத் தொடர்ந்து கோவனுக்கு திருச்சியில் நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் இந்திரஜித், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் தமிழாதன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னதுரை, வழக்கறிஞர் கென்னடி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கோவன் கூறியதாவது:- மதுவின் தீமைகள்... டாஸ்மாக் மதுபான கடைகளால் மக்களுக்கு ஏற்படும் தீமைகளை விளக்கி தான் நான் பாடல் படித்தேனே தவிர, அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால் என் மீது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்தியதாக கூறி வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில்... கூடவே என் மீது தேசத் துரோக வழக்கும் போட்டிருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைவதற்குமுன் வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இப்படி பாடியதற்காக வழக்கு போட்டுள்ளார்கள். அதன் பிறகு இப்போதுதான் நடந்துள்ளது. திருடனைப் போல் கைது... என்னுடைய பாடலை இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டுள்ளனர். அதை பலர் ரிங்க் டோனாக வைத்திருக்கிறார்கள். இப்படி மக்கள் அங்கீகரித்த பாடலை பாடியதற்காக என்னை கைது செய்தனர். ஒரு திருடனை கைது செய்வதைபோல, ராத்திரியில் கைதுக்கான எந்த காரணமும் சொல்லாமல் கடத்தி செல்வதைபோல் மிக மோசமாக நடத்தினார்கள். தனிமை சிறையில் என்னை அடைத்து வைத்திருந்தார்கள். ஒரு கோவனைக் கைது செய்யலாம்... உண்மையிலேயே முதல் இரண்டு நாட்கள் மன ரீதியிலான குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். லத்தியால் அடிக்கவில்லை. ஆனால் அதைவிட அனைத்து சித்ரவதைகளையும் செய்தனர். ஒரு கோவனை கைது செய்துவிடலாம் என நினைத்தார்கள். இப்போது பல்லாயிக்கணக்கான கோவன்கள் மது ஒழிப்புக்கு எதிராக எழுச்சி பெற்றுள்ளார்கள். போராட்டம்... என்னுடைய கைதுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மக்கள் போராடினார்கள். குறிப்பாக லண்டன், டெல்லி, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது என அறிந்தேன். கொள்கைகளை கடந்து பல்வேறு இயக்க தலைவர்கள் எனது கைதுக்காக குரல் கொடுத்தார்கள். நீதியரசர் சந்துரு, மார்கண்டேய கட்ஜூ உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் நடவடிக்கை தவறு என குற்றம் சாட்டியுள்ளார்கள். நன்றி... இத்தனைக்கும் பிறகும் என்னை சட்டப்போராட்டம் நடத்தி இப்போது வெளியில் கொண்டுவந்துள்ள வழக்கறிஞர்களுக்கும், கேரளாவில் என்னை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்திய தெருக்கூத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அமைதியாக இருந்த திரைத்துறை... பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் நான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த நடிகரும் குரல் கொடுக்கவில்லை. ஒரு தெருக்கூத்து கலைஞன் என்ற அடிப்படையில் எனது கைதினை திரைத்துறையினரும் கண்டித்து இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. இன்று நான்... நாளை நீங்கள் நான் தெருக்கூத்து கலைஞன். அவர்கள் திரைக்கலைஞர்கள் இந்த வர்க்கபேத அரசியலால் குரல் எழுப்பவில்லையா என தெரியவில்லை. ஆனால் ஒன்று... எதிர்காலத்தில் அவர்களுக்கும் இதே போன்ற நிலைமை வரலாம். போராட்டம் தொடரும்... தமிழக அரசின் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளால் எங்கள் அமைப்பு முடங்கி விடாது. அடக்கு முறை மூலம் எங்கள் போராட்டங்களை தடுத்து விட முடியாது. நாங்கள் 30 ஆண்டுகளாக சமூக அவலங்களுக்கு எதிராக போராடி வருகிறோம். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எதிர்மறை நன்றி... தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் எனது பாடல்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அதற்காக தமிழக அரசுக்குதான் எதிர்மறை நன்றி சொல்ல வேண்டும். எங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பதை விரைவில் அறிவிப்போம்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் கைது? இதற்கிடையே, கோவனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்கிற மனுவை புதிதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கூடவே கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மக்களை போராட தூண்டியதாக வழக்கு போடப்பட்டு அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், கோவனின் சொந்த ஊர் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments