தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருக்கிறது. இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையுடன், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலில் மற்று மொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :
கனமழை காரணமாக சென்னை, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவாரூர், தர்மபுரி, திருச்சி, தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கரூர், தூத்துக்குடி, நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு :
சென்னை பல்கலை.,யின் கீழ் இயங்கும் கல்லூரிகள், திருவள்ளூவர் பல்கலைக்கழகம், சென்னை மாநிலக் கல்லூரி, அண்ணா பல்கலைகழகம் ஆகியவற்றில் இன்று நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வில் மாற்றமில்லை :
ப்ளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 22 வரை நடைபெறும் எனவும், பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9ம் தேதி துவங்கி டிசம்பர் 21 வரை நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன் அட்டவணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர் , கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் தொடர் விடுமுறை விடப்பட்டு வருகிறது. இதனால் அரையாண்டு தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தான் கனமழை பெய்துள்ளது. எனவே, இப்போதைக்கு அரை ஆண்டு தேர்வு கால அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி தேர்வு நடைபெறும்.ஆனால், இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, இந்த 3 நாட்களுக்கு பிறகு அரை ஆண்டு தேர்வு நடைபெறும் அட்டவணையில் மாற்றம் உண்டா? இல்லையா? என்பது தெரிய வரும்" எனத் தெரிவித்துள்ளார்.
2 பெண்கள் பலி :
மழை காரணமாக மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலியாகி உள்ளனர். அறுந்து விழுந்த மின்கம்பியை மிதத்ததால் சென்னை வியாசர்பாடியில் லட்சுமி என்ற பெண்ணும், காஞ்சிபுரத்தில் மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
Comments