கொடநாடோ... கோட்டையோ? எங்கிருந்தாலும் வெள்ளத்தை பார்க்க வரமாட்டார் ஜெயலலிதா - ஸ்டாலின் தாக்கு

Stalin visits flood-hit areas in North ChennaiOneIndia News : சென்னை: மக்களைப் பற்றி சிந்திக்க முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேரமில்லை. தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களை வாங்குவதைப் பற்றிதான் முழு முயற்சி ஈடுபட்டுள்ளார். வெள்ளநிவாரணப் பணிகளை பார்வையிட முதல்வர் வருவதில்லை. கொடநாடோ, கோட்டையோ எங்கிருந்தாலும் அவருக்கு மக்களைப் பற்றி கவலையில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். சென்னை மாநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2500 கோடி எங்கே போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். காந்தி நகரில் இருந்து பெரியார் நகர் வரை மு.க..ஸ்டாலின் பைக்கில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பெரியார் நகரில் உள்ள சரச்சில் வெள்ள நீர் புகுந்தது. அந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார். மழை நீரை அகற்றும்படி அதிகாரிகளை கேட்டு கொண்டார், பெரியார் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளதை பார்வையிட்டார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் ஸ்டாலின். அப்போது பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா, கொடநாட்டில் இல்லை, சிறுதாவூர் பங்களாவில் இல்லை. போயஸ்கார்டனில் இருக்கிறார். கோட்டைக்கு வருகிறார், ஆனாலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரவில்லை. அவருக்கு இருக்கும் நினைப்பு எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களை மிரட்டி வாங்க வேண்டும் என்பதுதான் என்று குற்றம்சாட்டினார். முதல்வர் ஜெயலலிதா சேதத்தை நேரில் சென்று பார்வையிடாதது மட்டுமல்ல, தனது சொந்த தொகுதியான ஆர்.கே.நகருக்கு கூட வரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
Stalin visits flood-hit areas in North Chennai
ஃபேஸ்புக்கில் கண்டனம் இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பதிவிட்டுள்ள ஸ்டாலின், "2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த முதல் நிதி நிலை அறிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற சிறப்பு நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் 500 கோடி ரூபாய் ஒதுக்கி, இதுவரை சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்திற்கு மட்டும் 2500 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் சென்னை மாநகரில் உள்ள சாலை மேம்பாடு, தெரு மேம்பாடு, மழை நீர் வடிகால் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்றைக்கு அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் வந்துள்ள இந்த மழை சென்னை மக்களை திணறடித்துள்ளது. அவர்களின் இயல்பு வாழ்க்கையை கிட்டத்தட்ட சூறையாடி விட்டது. அப்படியென்றால் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி 2500 கோடி ரூபாய் எங்கே போனது? இத்தனை ஆயிரம் கோடி செலவிடப்பட்டும் ஏன் சென்னை மாநகர மக்களை மழை நீர் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியவில்லை? ஒரே வரியில் பதில் சொல்வதன்றால் செயலிழந்த சென்னை மாநகராட்சியிடமிருந்தும், அதிமுக அரசிடமிருந்தும் இதை தவிர வேறு எதையும் மக்கள் எதிர்பார்க்க முடியாது.அதனால் தான் மக்கள் நிவாரணம் கோரி ஆங்காங்கே சாலை மறியலிலும், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை முற்றுகையிடுவதிலும் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள்.
Stalin visits flood-hit areas in North Chennai
இது போன்ற சூழலில் அதிமுக அரசும், அதிமுக தலைமையில் இயங்கும் சென்னை மாநகராட்சியும் "சென்னை மாநகர வளர்ச்சிக்காக" ஒதுக்கப்பட்ட 2500 கோடி ரூபாய் சிறப்பு நிதிக்குரிய விளக்கத்தை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சென்னை மாநகரம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அலட்சியம் காட்டும் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments