அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகும் முத்தரையர்கள் : போலீஸ் குவிப்பு
நக்கீரன் இணைய செய்தி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாள். அ.தி.மு.க மாஜி ஒ.செ சொக்கலிங்கம் மனைவி. கட்சி சீட் கொடுக்காததால் அ.தி.மு.க வேட்பாளரை எதிர்த்து சுய பலத்தில் சுயேட்சையாக சேர்மன் ஆனவர்.
தனது ஒன்றியத்தில் தாய் சேய் நலவிடுதிகள் கட்டித் தரக் கோரி சுகாதார துறைஅமைச்சரும் புதுக்கோட்டை அ.தி.மு.க மா.செவுமான விஜயபாஸ்கரை இலுப்பூரில் அவரது வீட்டில் சந்திக்கச் சென்ற போது ஜாதி பெயரைச்சொல்லி இழிவாக பேசியதாக கெங்கையம்மாள் சொக்கலிங்கம் ஆகியோர் அமைச்சர் மீது புகார் கூறி வந்தனர்.
அதனால் முத்தரையர் சங்கங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 5ந் தேதி புதுக்கோட்டையில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த சங்க சமூக இளைஞர்கள் தடைகளை மீறி ஆர்ப்பாட்டம் , சாலை மறியல், கட்சி அலுவலகம் தாக்குதல், தடியடி கல்வீச்சுகளை நடத்தினார்கள்.
அதன் பிறகு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த நிலையில் 12 ந் தேதி மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அச்சங்கத்தின் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் 11 ந் தேதி இரவு கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாள் அவரது கணவர் கருப்பட்டிபட்டி ஊராட்சி தலைவர் சொக்கலிங்கம் ஆகிய இருவரும் நீங்கப்பட்டனர். ஆனால் புகாருக்குள்ளான அமைச்சர், மா.செ மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இந்த தகவல் அச்சமூக இளைஞர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தடையை மீறி போராட்டங்கள் நடத்துவார்கள் என்று புதுக்கோட்டை, ஆலங்குடி மற்றும் பல இடங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
ஆனால் மாலையில் முத்தரையர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒன்றுகூடி அடுத்த கட்ட போராட்டம் பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் கசிகிறது. புதுக்கோட்டை பதட்ட கோட்டையாக மாறியுள்ளது.
Comments