இதுபோன்ற தொடர், விகடன் வாசகர்களுக்குப் புதிது அல்ல. ஏற்கெனவே கடந்த தி.மு.க ஆட்சியின்போது, கருணாநிதி பற்றியும் அவரது தலைமையில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதேபோல் தொடர்ந்து எழுதி வெளியிட்டுள்ளோம். அரசு இயந்திரத்தை, நம்மை ஆளும் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதும், விமர்சிப்பதும் ஒரு பத்திரிகையின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று. அப்படி இப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான தொடர் கட்டுரைகளின் வரிசையில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளைப் பற்றிய ஒரு விமர்சன கட்டுரையை, ‘என்ன செய்தார் ஜெயலலிதா?' என்ற தலைப்பின் கீழ் நவம்பர் 25-ம் தேதியிட்ட இதழில் வெளியிட்டோம். அது முதல் ஆனந்த விகடன் மீது கடுமையான விமர்சனங்கள் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்' வெளியீட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர்-பதிப்பாளர் மற்றும் அச்சிடுபவர் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விகடனுக்கு வழக்குகள் புதிது அல்ல. இந்த வழக்கையும் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தொடர்ந்து கிடைத்துவரும் தகவல்கள், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பவையாக உள்ளன. ஆனந்த விகடனின் முகவர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரைத் தொடர்பு கொள்ளும் காவல் துறையைச் சேர்ந்த சிலர், ஆனந்த விகடனை விற்கக் கூடாது என்று அச்சுறுத்துகின்றனர். மீறி விற்பனை செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள். இது அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
தவிர, விகடனின் ஃபேஸ்புக் பக்கம் கடந்த 23-ம் தேதி மாலை முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப்களில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் விகடனைத் தொடர்ந்து வருகிறார்கள். இதில் ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கம் மட்டும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த ஒரு முறையான அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பிலிருந்து மேற்கொண்ட விசாரணைக்கும், இதுவரை முறையான, முழுமையான பதில் இல்லை. ஃபேஸ்புக் பக்கத்தை மீட்கும் முயற்சியைத் தொடர்கிறோம். எனினும், ஃபேஸ்புக் பக்கம் முடக்கத்துக்கும், இந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உலகுக்கு உண்மையை உரத்துச் சொல்லும் விகடனின் பணி கம்பீரமாகத் தொடரும். ஆனந்த விகடனின் வரமும் உரமும் வாசகர்களாகிய நீங்கள்தான். தங்களின் அன்பும் ஆதரவுமே என்றென்றும் எங்களை வழிநடத்தும்! -ரா.கண்ணன், ஆசிரியர், ஆனந்த விகடன். இவ்வாறு ரா. கண்ணன் கூறியுள்ளார்.
Comments