சென்னையில் தாழ்வான பகுதிகளில் வடியாத வெள்ளம்- எம்.எல்.ஏ, எம்.பி.,யை முற்றுகையிட்ட மக்கள் (படங்களுடன்)
சென்னையில் கடந்த நான்கு நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் மாநகராட்சி பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த மூன்று நாள்களில் பெய்துவரும் பலத்த மழையில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முறிந்து விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
வடசென்னை பகுதிகளாக தண்டையர்பேட்டை, கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகரில் உள்ள சுமார் 100 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அதேபோல கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர், தண்டையார்பேட்டை தமிழர் நகர், அன்னை சத்யா நகர், புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர், கைலாசம் தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே அன்னை சத்யா நகர் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் இங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இரண்டரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெள்ளத்தை அகற்றக்கோரி வில்லிவாக்கம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ. மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஒருவாரமாக தூக்கமின்றி, குளிக்க முடியாமல் தவிக்கிறோம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 5 நாட்களாக வெள்ளநீர் தேங்கியுள்ளது. மின்சார வசதியின்றியும், குடிநீர் வசதியின்றி தவிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மத்திய சென்னை பகுதி எம்.பி விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்த போது அவரிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த 5 நாட்களாக சமையல் செய்யமுடியாமல் தவிக்கும் தங்களுக்கு சாப்பாடு எதுவும் தேவையில்லை. தண்ணீரை வெளியேற்றி வாழவழி செய்ய வேண்டும் என்றும் குடிநீர், மின்சார வசதி செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல வேளச்சேரி, கொளத்தூர். தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவில்லை. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அதில் கொசுக்கள் முட்டையிட்டு புழுக்கள் உற்பத்தியாகியுள்ளதாகவும் வீடுகளுக்குள் தங்க முடியாமல் உறவினர்களின் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Comments