தினமலர் செய்தி : புதுடில்லி: 'குற்றப் பின்னணி இல்லாத, தகுதி வாய்ந்த நபர்களையே, அரசு வழக்கறிஞர்களாக, மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களுக்கு, அம்மாநில அரசு பணி நீட்டிப்பு வழங்க மறுத்தது. இதுதொடர்பான வழக்கில், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி, அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை ஒன்றாக விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், விக்ரம்ஜித் சென், ஏ.எம்.சப்ரே ஆகியோரைக் கொண்ட அமர்வு, அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாவட்ட நீதிமன்றங்களில், கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம், தகுதி அடிப்படையில் தான் நடைபெற வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்களை மீண்டும் பணி அமர்த்துவதோ அல்லது அரசு வழக்கறிஞர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதோ கூடாது. இது, தகுதி வாய்ந்த, நம்பகமான வழக்கறிஞர்களை நியமிக்க நினைக்கும், மாநில அரசுகளின் உன்னத நோக்கத்தை நீர்க்கச் செய்து விடும். குடிமக்கள் அனைவருக்கும் நியாயமும், நீதியும் கிடைக்க வேண்டும்; அதற்கு குந்தகம் விளைவிக்கும், எந்த செயலுக்கும் துணை போகக் கூடாது என்ற ஒரே நோக்கம், மாநில அரசுகளுக்கு இருக்க வேண்டும்.எனவே, நல்ல, தகுதி வாய்ந்த, கிரிமினல் குற்றப் பின்னணி இல்லாத வழக்கறிஞர்களை, மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால், சரியான நீதி கிடைக்காது. 'விருப்பமான வழக்கறிஞர்களை நியமிக்க, மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது' என, ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளதை, சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments