தொடர் மழையால் வீடுகள் இடிந்ததால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும், வெள்ளம் சூழ்ந்ததால் லட்சக்கணக்கான குடும்பங்களும் இடர் உதவி முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் கூட செய்து தரப்படவில்லை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புயல் கரையை கடந்து 4 நாட்களாகியும் இதுவரை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. சென்னை - கும்பகோணம், கடலூர் - சிதம்பரம் சாலைகளில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. அந்த அளவுக்கு நிவாரணப் பணிகள் நத்தை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பாதிப்புகளை சரி செய்வதற்காக அதிகாரிகள் குழு அனுப்பப் பட்டிருக்கும் போதிலும் பணிகளில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.மொத்தத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு எந்திரம் இருப்பதாகவோ, செயல்படுவதாகவோ தெரியவில்லை. வெள்ளப் பணிகளை கண்காணிக்க அனுப்பப்பட்ட அமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாண்டி வேறு எங்கும் செல்லவில்லை. இதேவேகத்தில் பணிகள் நடைபெற்றால் கடலூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல வாரங்கள் ஆகும். பா.ம.க. முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை கண்ணீர் மல்க கூறியிருக்கின்றனர். கடலூர் மக்களின் நிலைமை கேட்பதற்கே வேதனை அளிப்பதாக உள்ளது. ஆனால், இதுவரை முதல்வரோ அல்லது அமைச்சர்களோ வெள்ளம் பாதித்த பகுதிகளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. கொடநாட்டில் ஓய்வெடுத்து வந்த முதல்வர் ஜெயலலிதா 3 நாட்களுக்கு பிறகு நேற்று தான் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். தமிழக மக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறை இருந்தால் உடனடியாக கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் குறையை கேட்டறிய வேண்டும். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது போதுமானதல்ல. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்பை கணக்கிட்டு அதை இழப்பீடாக வழங்க வேண்டும்; உழவர்களின் பயிர்க்கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். வெள்ளத்தில் சிக்கி இறந்த மாடுகளுக்கு ரூ.50 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரம், கோழிகளுக்கு ரூ.250 வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக ரூ.25,000 ரூபாயும் பின்னர் சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்கான செலவைக் கணக்கிட்டு அதை முழுமையாகவும் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒருமுறை நிதி உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Comments