'மத்திய அரசு கூட்டணியில் இல்லை: முதல்வர் ஜெ.,

தினமலர் செய்தி : 'மத்திய அரசு கூட்டணியில் நாம் இல்லை. பிரச்னை அடிப்படையில் மட்டுமே, அந்த அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்; அதை உணர்ந்து செயல்படுங்கள்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கி உள்ளார்.

பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், 26ல் துவங்க உள்ளது. இதையொட்டி, அ.தி.மு.க.,வின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா, தலைமை வகித்தார்.

கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளனர். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். மத்திய அரசு கூட்டணியில் நாம் இல்லை. பிரச்னை அடிப்படையில் மட்டுமே, ஆதரவு கொடுக்கிறோம்; அதை உணர்ந்து செயல்படுங்கள்.விரைவில் சட்டசபைக்கு தேர்தல் வர உள்ளது. எனவே, மக்களுக்கு தேவையான பணிகளை விரைந்து செய்யுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டம் முடிந்த பின், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி.,க்கள் வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோருடன், முதல்வர் தனியாக ஆலோசனை நடத்தினார்.

Comments