சென்னை அம்பத்துார் மண்டலம், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பழைய அக்ரஹாரம், சிவலிங்கபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 9ம் தேதி முதல், பகுதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அவர்கள், தீபாவளியை கொண்டாட முடியாமல் போனது.மழைநீரை அகற்றுவது என்பது உள்ளிட்ட எந்தவித அடிப்படை நிவாரண உதவியும், அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று பகலில், அம்பத்துார் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.வேதாச்சலம், பால்வள துறை அமைச்சர் பி.வி.ரமணா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சி பிரமுகர்கள், கொரட்டூர் வீ.வ.வா., குடியிருப்புக்கு சென்றனர்.அவர்கள், காரில் சென்றவாறு பார்வையிட்டதை கண்ட பகுதிவாசிகள், கும்பலாக சென்று கார்களை மறித்தனர். அவர்களிடம், 'பத்து நாட்களாக வராத நீங்கள், இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள். எங்களை புதைக்கவா?' என, ஆவேசப்பட்டனர்.
வேறு வழியின்றி, காரில் இருந்த இறங்கிய அவர்களை முற்றுகையிட்டு கொந்தளித்தனர். அமைச்சர், பகுதிவாசிகளை சமாதானப்படுத்த முயன்றார். 'வெள்ள நீரை அகற்ற, இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதி கவுன்சிலர், எம்.எல்.ஏ., யாரும் இங்கு வரவில்லை' என, அமைச்சரிடம் கூறினர்.
அமைச்சர், எம்.எல்.ஏ., விடம், 'இந்த பகுதி கவுன்சிலர் யார்' என, கேட்டார். எம்.எல்.ஏ., வேதாச்சலம், 'என் மகன் தான்' என்றார்.அப்போது, ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் கூறியதாவது: அவர் மருமகள் தான் கவுன்சிலர். அவரை நாங்கள் தேர்தலுக்கு முன்தான் பார்த்துள்ளோம். அதன்பின் இதுவரை அவர், இங்கு வந்ததில்லை.
நாங்கள் மழை, கழிவுநீரில் தவிக்கிறோம். ஐந்து நாட்களாக மின்சாரம் இல்லை. அகதிகளுக்கு கூட அவசர கால அடிப்படை வசதிகள் கிடைக்கும். எங்களுக்கு உதவ இவர்கள் வரவில்லை, என்றனர்.பதறிப் போன எம்.எல்.ஏ., வேதாச்சலம், அமைச்சரின் முன்னிலையிலேயே, அவர்களை அமைதியாக இருக்குமாறு, சத்தமிட்டார்.
இதனால், பகுதிவாசிகள் கோபம் அடைந்து, எம்.எல்.ஏ., மற்றும் அவர் மருமகள் 83வது வார்டு கவுன்சிலர் தி.எழில்தேவியை கண்டித்து கோஷமிட்டனர்.நிலைமை மோசமாவதை உணர்ந்து, அமைச்சர், எம்.எல்.ஏ.,வை கண்டித்தார். இதையடுத்து, அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
Comments