வெள்ள சேதம் பார்வையிட தமிழகம் வந்தது மத்திய குழு

தினமலர் செய்தி : தமிழகத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய அரசு நியமித்துள்ள குழு, நள்ளிரவு தமிழகம் வந்தது.

'தமிழகத்தில், மழையால், 8,481 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக, 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும். வெள்ள சேதத்தை மதிப்பிட, மத்திய குழுவை அனுப்ப வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக, மத்திய அரசு, 940 கோடி ரூபாய் ஒதுக்கியது; மத்திய குழுவை அனுப்பவும் உறுதி அளித்தது.அதன்படி, மத்திய உள்துறை இணை செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், மத்திய வேளாண் துறை கூடுதல் இயக்குனர் ஒய்.ஆர்.மீனா, நிதித்துறை (செலவினங்கள்) கூடுதல் இயக்குனர் எம்.எம்.சச்தேவா, குடிநீர் துறை மூத்த ஆலோசகர் ஜி.ஆர்.ஜர்கர், சென்னை குடிநீர் துறை மூத்த வட்டார இயக்குனர் ஆர்.ரோஷிணி, மின் துறை உதவி இயக்குனர் சுமித்கோயல், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பி.சி.பெஹ்ரா, பெங்களூரு நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாளர் எம்.எம்.கிருஷ்ணன் உன்னி, சென்னை சாலை போக்குவரத்துத் துறை பிராந்திய இயக்குனர் டி.எஸ்.அரவிந்த், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் ரோஷிணி, அரவிந்த், ஆகியோர் சென்னையில் உள்ளனர். மற்றவர்கள் விமானம் மூலம், நள்ளிரவு சென்னை வந்தனர்.அனைவரும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்குகின்றனர். அதன்பின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் மற்றும் தமிழக அதிகாரிகளை சந்தித்து பேசிய பிறகு, மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், வெள்ள சேதம் குறித்த விவரங்களை தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்வர்.

முதல்வருடன் மத்தியக்குழு சந்திப்பு

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியக் குழு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளது. தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இக்குழுவினர் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த காஞ்சிபுரம் மாவட்டம் செல்கின்றனர், தாம்பரம், முடிச்சூர், ராஜகீழ்பாக்கம், கோவிலம்பாக்கம், அடையாறு பாலம் ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்கின்றனர். 

தலைமை செயலருடன் மத்திய குழு சந்திப்பு

தமிழகத்தில் பெய்த மழை சேதம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்தியக்குழு இன்று சென்னை வந்தது. இக்குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் ஞான தேசிகனுடன் சந்தித்து பேசினர்.

Comments