தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர்... கருணாநிதியைவிட ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு- ஜூ.வி சர்வே!

OneIndia News : சென்னை: தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கருணாநிதியைவிட அவரது மகனும் கட்சி பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு உள்ளதாக ஜூனியர் விகடன் சர்வே தெரிவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு தொடர்ச்சியாக பல்வேறு தலைப்புகளில் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த இதழில் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடு எப்படி என கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தது. அதில் விஜயகாந்த் செயல்பாடுகள் சூப்பர் என வெறும் 10% பேர்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர். பெரும்பான்மையானோர் விஜயகாந்த் செயல்பாடு படுமோசம் என கூறியிருந்தனர். அதற்கு முன்னர் ஜெயலலிதா அரசின் செயல்பாடு குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டிருந்தது. அதில் ஜெயலலிதா அரசின் செயல்பாடு படுமோசம் என பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக யாருக்கு உங்கள் ஆதரவு என்ற கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது. மொத்தம் 16,846 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு 39.40% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதவது 6,637 பேர் மட்டும் முதலமைச்சர் வேட்பாளராக கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு 60.60% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 10,209 பேர் ஸ்டாலினுக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றனர் என்கிறது ஜூ.வி. சர்வே.

இதில் மதுரை மண்டலத்தில்தான் மு.க.ஸ்டாலினுக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. அம்மண்டலத்தில் 3,626 பேர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மதுரைக்கு அடுத்து சென்னை மண்டலத்தில் 3,206 பேர் ஸ்டாலினை ஆதரிக்கின்றனர்.

கருணாநிதிக்கு சென்னை மண்டலத்தில் 2,148 பேர், மதுரை மண்டலத்தில் 2,060 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கிறது ஜூ.வி. சர்வே.

Comments