தத்தளிக்கும் முதல்வர் ஜெயலலிதா தொகுதி (படங்கள்)

ஜூனியர் விகடன் செய்தி : சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதியிலும் மழை, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடசென்னையில் எங்குப்பார்த்தாலும் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை, ஆர்.கே. நகர், கொருக்குப்பேட்டை பகுதிகளில் மழை நீர் வீடுகளில் புகுந்துள்ளது.

காசிமேடு சிங்கார வேலன் நகர், சூரிய நாராயணன் தெரு மற்றும் வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, தண்டையார் பேட்டை நெடுஞ்செழியன் நகர், ராஜசேகரன் நகர், நேதாஜி நகர், புதுவண்ணாரப்பேட்டை, ஜீவாநகர், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர், பாரதி நகர் பல இடங்களில் மழை நீர் சூழந்துள்ளது.

மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி கல்லறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் நீரை உடனே வெளியேற்றவும், நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு மக்கள் மறியலை கைவிட்டனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் மழைநீர் வடிகால்வாய்களை சரிவர பராமரிக்கவில்லை. இதுவே மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததாக மக்கள் சொல்கிறார்கள். முதல்வர் தொகுதி என்பதால் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் மழை நீர் செல்ல வழியில்லாததால் பல இடங்களில் குளம்போல தேங்கி நிற்கிறது.
முதல்வர் தொகுதியை பளீச் என்று காட்டுவதற்காக சில மாதங்களுக்கு முன்பு சாலை போடப்பட்டுள்ளது. அப்போது மழை நீர் கால்வாய்களை மாநகராட்சி கண்டுக்கொள்ளவில்லை. சரியாக மழை நீர் கால்வாயை பராமரித்து இருந்தால் வெள்ளத்தில் ஆர்.கே.நகர் தொகுதி பாதிக்கப்பட்டு இருக்காது என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த தொகுதியில் கழிவு நீருடன் கலந்து குடிநீர் வருவது மக்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இதுதொடர்பாக புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை. இன்னொரு ஸ்ரீரங்கமாக மாறும் என்று கனவு கண்ட மக்களுக்கு அது கனவாகவே இருக்கிறது. நிஜமாகவில்லை.

Comments