உலக அளவில், உப்பு உற்பத்தியில், சீனா முதலிடம் பெற்றுள்ளது. இங்கு, கடல், தாதுக்கள், நீரூற்றுகள் மற்றும் கிணற்று நீரில் இருந்து உப்பு எடுக்கப்படுகிறது. இவற்றில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது குறித்த ஆய்வுக்காக, நாடு முழுவதிலும் இருந்து, 15 நிறுவன தயாரிப்புகள் சேகரிக்கப்பட்டன. இவற்றை, ஷாங்காய் நகரில் உள்ள, கிழக்கு சீன பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருப்பது உறுதியானது. இந்த துகள்கள், 5 மி.மீ.,க்கும் குறைவான அளவில் இருந்தது. 1 கிலோ உப்பில், 550 முதல், 681 நுண் துகள்களும்; தாது உப்பு மற்றும் கிணற்று நீரில் இருந்து எடுக்கப்பட்ட உப்பில், 1 கிலோவுக்கு, 204 துகள்களும் இருந்தன. இந்த உப்புகளை மக்கள் பயன்படுத்தும் போது, பிளாஸ்டிக் துகள்கள் உடலில் செல்லும்.
இதற்கு காரணம் நாம் தான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், பேஸ் ஸ்கரப், ஷவர் ஜெல் மற்றும் டூத் பேஸ்டுகளில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இவை மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை சரி வர அழிக்காததால், ஆண்டுதோறும், கடலில், 50 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் செல்கின்றன.கடல் வாழ் உயிரினங்கள் இவற்றை உண்கின்றன. சமீப காலமாக, கடல் ஆமைகள், கடல் பறவைகள் மற்றும் திமிங்கலங்களின் வயிற்றிலும், பிளாஸ்டிக் காணப்படுகிறது. ஆழ்கடலில் உள்ள தாவரங்களிலும் பிளாஸ்டிக் ஊடுருவியுள்ளது. உலகின் பல நாடுகளின் கடற்கரை மணலிலும், பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன.
Comments