முதலில் இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த ஆண்டின் துவக்கத்தில் இதனை கொலை வழக்காக டில்லி போலீசார் பதிவு செய்தனர். இது தொடர்பாக அடையாளம் தெரியாத பலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், சுனந்தாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர் உள்ளிட்ட பலரிடமும் விசாரிக்கப்பட்டது. சுனந்தாவின் கணவர் சசிதரூரிடமும் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது.
சுனந்தாவின் உடலில் நீலநிற அடையாளங்கள் இருந்ததால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சுனந்தாவின் உடற்கூறுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சுனந்தா விஷம் கொடுத்து தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு உறுதி செய்தது. இருப்பினும் மீண்டும் உடற்கூறு சோதனைக்காக வாஷிங்டன் எப்.பி.ஐ.,லேப்பில் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வுக்கு அனுப்பப்பட்டு சுமார் 9 மாதங்களுக்கு பிறகு, சோதனை அறிக்கையை அமெரிக்கா டில்லி போலீசுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
இந்த அறிக்கையில், சுனந்தா விஷம் கொடுத்து கொல்லப்படவில்லை. அவர் சாப்பிட்ட மருந்துகளில் பொலினியம் அல்லது மற்ற அதிக கதிரியக்க திறன் கொண்ட துகள்கள் ஏதும் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட அளவே கதிரியக்கம் கொண்டு மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷ்னர் பாசி கூறுகையில், எப்பிஐ லேப் அனுப்பி வைத்துள்ள அறிக்கை கிடைத்துள்ளது. இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தேவைப்பட்டால் சசிதரூரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
விஷம் கொடுத்தும் சுனந்தா கொல்லப்படவில்லை என்றால், அவர் இறந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து அறிய, தடயவியல் ஆதாரங்களும் ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Comments