மாநிலம் முழுவதிலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தேசிய ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும், ஆங்கில செய்திச் சேனல்களில் பெரும்பாலானவை மத்தியில் ஆள்வோர் கவனத்திற்கு அதை கொண்டு செல்லும் வகையில், செய்திகளை ஒளிபரப்பவில்லை. ஏதோ ஒருமுறை காட்டிவிட்டு வாய் மூடிக்கொள்கின்றன. சில சேனல்கள் அதையும் செய்வதில்லை.
மும்பையில் மழை பெய்தபோது, தேசிய ஊடகங்கள் எவ்வாறு 3 நாட்கள் அதையே திரும்ப திரும்ப காட்டின என்பதையும், டெல்லியில், ஒரு கட்டிடத்தில் தீ பிடித்து அது பாதிப்பே இல்லாமல் அணைக்கப்பட்ட சம்பவத்தை கூட அரை நாள் முழுக்க காட்டியதையும் பார்த்த மக்களுக்கு, இது வியப்பாக உள்ளது.
பொதுவாக தென் இந்திய செய்திகளை ஒளிபரப்புவதில் தங்களை தேசிய ஊடகம் என்று கூறிக்கொள்ளும் டிவி சேனல்கள் தயங்குகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற பேரிடர் காலத்தில் அது இரக்கமின்றி மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டிவிட்டரி்ல் ஓடும் #chennairains உள்ளிட்ட தமிழ் நெட்டிசன்கள் உருவாக்கும் ஹேஷ்டேக்குகள்தான் தேசிய அளவில் அதுகுறித்த தகவலை அறிய செய்கிறது. இருப்பினும் சோஷியல் மீடியாக்களைவிட, மீடியாக்களின் பங்களிப்பு இதில் அதிகம் தேவைப்படுகிறது. இதை ஆங்கில இந்திய சேனல்கள் மறந்துவிட்டன.
இந்த விஷயத்தில் என்டிடிவி மற்றும் சிஎன்என்-ஐபிஎன் பரவாயில்லை. தங்கள் நிருபர்களை களத்தில் இறக்கி அவ்வப்போது காட்சிகளையும், தகவல்களையும் ஒளிபரப்புகிறார்கள். நம்பர்-1 நாங்கதானுங்கோ... என மணிக்கொருமுறை கூவும் சேனல், பாரீசில் மெழுகுவர்த்தி ஏந்தும் ஊர்வலத்தை காட்டுகிறதே தவிர, தமிழகம் தத்தளிப்பதை காட்ட தயாராக இல்லை. அதேபோன்றுதான், பல ஆங்கில சேனல்களும் நடந்துகொள்வதாக நெட்டிசன்கள் அங்கலாய்க்கிறார்கள்.
இனிமேல் தேசிய சேனல்கள் என்பதற்கு பதிலாக, வட இந்திய சேனல்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தமிழக மக்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Comments