தமிழகத்தில் பல மாவட்டங்களில் மீண்டும் மழை

தினமலர் செய்தி : சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக வலுவடைந்து உள்ளது. இதனால் இன்று முதல், நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும்.

அதன் விபரம்:

நவ., 29: தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் பரவலாக கனமழை அல்லது மிக கன மழை பெய்யும்.

நவ., 30, டிச., 1: தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிகக் கனமழையும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.

டிச., 2: தமிழக கடலோர பகுதிகள், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் நிம்மதியாக இருந்த சென்னைவாசிகளை மிரட்டும் வகையில், சென்னையில் சேப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக்கேணி, மைலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. நகர்ப்பகுதியில் பரவலாக மழை பெய்தாலும், புறநகர்ப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக சென்னையில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது.

ஈரோடு, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருமணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சேலம மாவட்டம் ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மதுரை, ராமேஸ்வரத்திலும் பரவலாக மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

மீண்டும் கனமழை: தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, இலங்கை அருகே நிலைகொண்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் கன்னிமார் பகுதியில் 12 செ.மீ., பாபநாசத்தில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Comments