சென்னை ஐகோர்ட் வளாகத்தில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் குவிப்பு

தினமலர் செய்தி : சென்னை : சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று மாலை முதல், மத்திய தொழில் பாதுகாப்பு படையான, சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் குவிக்கப்பட்டனர். நாளை முதல், அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புக்கு ஏதுவாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள, 'மெட்ராஸ் பார் அசோசியேஷன் கேட்' நுழைவு வாயிலில் இருந்து, வடக்கு கோட்டை சாலை வரை இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

கீழமை நீதிமன்ற வளாகத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு, இரும்பு கம்பி வேலி இடையே, ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக செல்லலாம்.சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள், 250 பேர், நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்றம் வந்தனர். மீதியுள்ள, 200 பேர் விரைவில் வர உள்ளனர். நேற்று வந்தவர்களில், 20 பேர் பெண்கள்.

நீதிமன்ற வளாகத்தில், வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. சி.ஐ.எஸ்.எப்., தலைமை காமண்டன்ட் பாலே, ஐ.ஜி., மிஸ்ரா ஆகியோர், அவர்களிடம் பாதுகாப்பு பணிகள் குறித்த விவரங்களை தெரிவித்தனர். உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும், மாலை, 6:00 மணியில் இருந்து சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள், யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. 

இன்று, பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது. நாளை முதல், சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு முழு அளவில் அமலாகிறது.உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு, சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள், 200 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். விரைவில், அங்கும் சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு அமலாகிறது.

Comments