ஒபாமா - மோடி 'ஹாட்லைனில்' பேச்சு

தினமலர் செய்தி : வாஷிங்டன் : அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுடன், டில்லி நகருக்கு ஏற்படுத்தப்பட்ட, 'ஹாட்லைன்' எனப்படும், நேரடி தொலைபேசி இணைப்பு வசதி மூலம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும், முதல் முறையாக பேசினர். கடந்த ஜனவரியில், குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வந்தபோது, இரு நாட்டு தலைநகரங்கள் இடையே, 'ஹாட்லைன்' வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அமெரிக்க அதிபர் ஒபாமா, தலைநகர் வாஷிங்டனிலிருந்து, டில்லியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசும் வகையில், ஹாட்லைன் வசதி அமைக்கப்பட்டது.

இதன் மூலம், நேற்று முன்தினம், முதல் முறையாக இருவரும் பேசினர். இதுகுறித்து, வாஷிங்டனில், அதிபர் ஒபாமாவின் அரசு இல்லமான, வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான அறிக்கை விவரம்:அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், ஹாட்லைன் மூலம் பேசினார்; இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்து, விவாதித்தனர். வளரும் நாடுகள் அமைப்பான, 'ஜி-20' மாநாட்டுக்கு முன்னதாக, உலகளாவிய பிரச்னைகள் குறித்தும், இருவரும் பேசினர். இந்திய பிரதமருடன், முதல் முறையாக, ஹாட்லைனில் பேசியதை குறிப்பிட்ட, அதிபர் ஒபாமா, பிராந்திய, உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், இந்தியா - அமெரிக்காவுக்கு உள்ள முக்கியத்துவத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார்.இவ்வாறு வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments