சென்னை வானிலை மையம், 'சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில், கன மழை பெய்யும்' என, எச்சரித்தது. ஆனால், வெயிலோடு காலை வேளை துவங்கியதால், ஒரு வாரமாக, மழை வௌ்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு, சற்று நிம்மதி ஏற்பட்டது. இந்த நிம்மதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பகல், 1:30 மணிக்கு, மழை லேசாகத் துவங்கியது; 2:30 மணியளவில் தீவிரமடைந்தது. மாலை, 5:30 மணி வரை, 7 செ.மீ., மழை பெய்தது. இதன்பின் சற்று தணிந்தது போல் இருந்த மழை, மீண்டும் தீவிரமடைந்தது. இரவு, 8:00 மணி வரை, 8.5 செ.மீ., மழை பெய்தது. அண்ணாசாலை, மைலாப்பூர், அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர், வடபழனி, கோயம்பேடு, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், பாரி முனை, திருவெற்றியூர் என, சென்னை மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் மழை கொட்டியது.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு : நான்கு மணி நேரத்துக்கும் மேலாக, தொடர்ந்து கன மழை பெய்ததால், மழை நீர் வௌ்ளமென சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, கோயம்பேடு நுாறடி சாலை, கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.வாகனங்கள் ஒரு அடி நகரவே, பல நிமிடங்கள் ஆனது. மாலை, 5:30 மணிக்கு ஏற்பட்ட வாகன நெரிசல், இரவு, 9:00 மணி வரை நீடித்தது.சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, மாம்பலம் மேட்லி சுரங்கப்பாதை, எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப்பாதை, பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதையில் வௌ்ள நீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல முடியவில்லை.பல இடங்களில், வாகனங்களில் தண்ணீர் புகுந்து, ஆங்காங்கே நின்று விட்டன. இதனாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மின் நிறுத்தம்: கன மழையால், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார், நங்கநல்லுார், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, அடையாறு, திருவான்மியூர், பாலவாக்கம், கண்ணகி நகர், துரைப்பாக்கம், பெருங்குடி, பட்டினப்பாக்கம், சாந்தோம், சீனிவாசபுரம், ராயபுரம், திருவொற்றியூர், எண்ணுார் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் இடங்களில், விபத்து ஏற்படாமல் இருக்க, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
மின்சார ரயில் தாமதம் : கன மழையால், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்; சென்னை சென்ட்ரல் - கும்மிடிபூண்டி; சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கங்களில் மின்சார ரயில் சேவை தாமதமானது. இதேபோல், சென்னை மாநகர பஸ் சேவையும் பாதிக்கப்பட்டது.
கருணாநிதி வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது...
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.
Comments