தினமலர் செய்தி : புதுடில்லி : 'சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, ஜனவரி, 8 முதல், தினமும் நடத்தப்பட்டு, விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், மே 11ல், தீர்ப்பு வழங்கப்பட்டது; நால்வருக்கும், நான்காண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா உட்பட, நான்கு பேரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி, ஜூலையில், அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டார். அதனால், ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.
உயர் நீதிமன்றத்தால், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக மாநில காங்., அரசு மேல் முறையீடு செய்தது.
அதுபோல, பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமியும், மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுக்களை, நீதிபதிகள், பி.சி.கோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் இடம் பெற்ற அமர்வு ஏற்கனவே விசாரித்தது.
அப்போது, 'எதன் அடிப்படையில், ஜெ., விடுதலையை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்து, எட்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
'ஜன., 8ல் விசாரணை துவங்கும்' என, கர்நாடக மாநில அரசுக்கும், ஜெ., விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்தவர்களுக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ள விவரங்களை, இருதரப்பினரும் விரைவாக தாக்கல் செய்தால் தான், ஜனவரி, 8ல் துவங்கும் விசாரணை, தினமும் நடத்தப்பட்டு, தீர்ப்பு விரைவாக வழங்கப்படும்' என்றனர்.இந்த உத்தரவால், ஜெ., விடுதலையை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணை, ஜனவரி, 8ல் துவங்கி விரைந்து நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.
Comments