அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும்: சொல்கிறார் அமித்ஷா

தினமலர் செய்தி : புதுடில்லி : அரசியல்வாதிகள் 60 வயதிற்கு மேல் அரசியலில் இருந்து ஒய்வு பெற்று, சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது பொதுவான கருத்தே தவிர, கட்சியில் தற்போதிருக்கும் எந்த உறுப்பினரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.உத்திர பிரதேசத்தின் சித்ரகோட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா பேசுகையில், பீகார் சட்டசபை தேர்தலின் போது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் பிரச்னைகளை கையாண்ட விதம் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மறைந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் தேஷ்முக் கூறியதை போன்று 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, சமூக சேவையில் ஈடுபட வேண்டும். இந்த கருத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் தேஷ்முக். அவர் 60 வயதிற்கு மேல் கிராமங்களையும், கிராமவாசிகளையும் முன்னேற்றுவதற்காகவே வாழ்ந்தார். இதை கட்சியில் இருக்கும் தற்போதுள்ள உறுப்பினர்கள் யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்த கருத்து அனைவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவானது என தெரிவித்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்து கட்சிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் தேர்தல் தோல்விக்கு அமித்ஷா தான் காரணம் என கட்சியின் மூத்த நிர்வாகிகளான அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி, சாந்தகுமார் ஆகியோர் கூறியதை மனதில் வைத்தே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் விமர்சனங்கள் குறித்து ராஜ்நாத் சிங், வெங்கைய்ய நாயுடு ஆகியோரும், மூத்த உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை தகுந்த முறையில் அளவோடு கூற வேண்டும் என கூறி இருந்தனர்.

மூத்த உறுப்பினர்கள் பலரின் கருத்துக்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதை கருத்தில் கொண்டும் அமித்ஷா இது போன்று பேசி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Comments