ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சில ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏனாத்தூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருந்த சரத், சேது ஆகிய சகோதரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அந்த இருவரையும் காப்பாற்ற முயன்ற அவர்களது தந்தையின் முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. இதேபோல காளூர் ஏரியை காணச்சென்ற முரளி என்ற இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இந்த ஐந்து பேரையும் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் தண்ணீர் செல்வதை வேடிக்கை பார்க்கச் சென்ற மணிகண்டன், லோகநாதன் ஆகிய இரண்டு சிறுவர்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் இருவரும் இன்று காலையில் சடலமாக மீட்கப்பட்டனர். வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்ற மூவரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. 6000 பேர் மீட்பு காஞ்சியில் செம்பரம்பாக்கம் ஏரி, நத்தப்பேட்டை ஏரி, செவிலிமேடு ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதாலும், ஒரு சில ஏரிகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டதாலும் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.இதனால், மாமல்லன் நகர், பிள்ளையார்பாளையம், எம்எம் நகர், செவிலிமேடு, நாகாலத்துமேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்புக் குழுவினர் உதவியுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments