ரூ.400 கோடி சதுப்பு நிலங்கள் 'அபேஸ்'

தினமலர் செய்தி : சென்னை, பள்ளிக்கரணையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான சதுப்பு நிலங்கள் அபகரிக்கப் பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும், வருவாய் துறை, பதிவுத்துறை ஒத்துழைப்பு இல்லாததால், போலீசார் நடவடிக்கைகள் முடங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

பள்ளிக்கரணையில், 66 ஏக்கர் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது குறித்த வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலங்கள் மட்டுமல்லாது, கூடுதலான நிலங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

வனத்துறை புகார்குறிப்பாக, வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்படாத, 167 நிலங்கள் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிய வந்ததும், இது குறித்து வனத்துறை, சென்னை மாநகர போலீசில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில் தெரிய வந்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. 

பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் கிராமங்களுக்கு உட்பட்ட சதுப்பு நிலங்கள் தொடர்பாக, 25 விற்பனை ஆவணங்கள் பதிவாகி உள்ளன. வருவாய்த்துறை ஆவண அடிப்படையில் அரசு நிலமாக உள்ள இவற்றை தனி நபர்கள் மோசடியாக விற்பனை செய்துள்ளனர்.குறிப்பாக, இந்த நிலங்கள் தொடர்பாக, முதலில், ஒருவர் பெயரில் போலி ஆவணம் தயாரிக்கப்படும். அந்த ஆவண அடிப்படையில், வெளியூரில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில், இன்னொருவர் பெயருக்கு பொது அதிகார ஆவணம் பதிவு நடந்துள்ளது. 

இப்படி பதிவான பொது அதிகார ஆவணங்கள் அடிப்படையில், புதிதாக விற்பனையும், வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்குவதும் நடந்துள்ளது. இதுவரை தெரிய வந்துள்ள மோசடி ஆவணங்களில் தொடர்புள்ள நிலங்களின் மதிப்பு, 400 கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் உத்தேசமாக மதிப்பிட்டுள்ளனர்.

அலட்சியம்: இந்த நில மோசடி விவகாரத்தில் வருவாய் துறை, பதிவுத்துறையின் மவுனம் சந்தேகங்களுக்கு இடம் அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த நபர்களை கண்டுபிடித்தும், சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய் துறை அலட்சியமாக உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு,'நோட்டீஸ்' கூட இன்னும் கொடுக்கவில்லை. 

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், வழிகாட்டி மதிப்பு கள் இல்லாத நிலங்கள் தொடர்பான விற்பனை ஆவணங்களை பதிவு செய்வது சட்ட விரோதம். ஆனால், பதிவுத்துறை அதிகாரிகள், தொடர்ந்து இது போன்ற ஆவணங்களை பதிவு செய்து கொடுப்பது நில மோசடி செய்பவர்களுக்கு உதவி புரிவதாக அமைந்து உள்ளது. எனவே, அரசு தலையிட்டு இந்த நிலங்களை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments