சமீபத்தில் பெய்த மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகலில் மிதமான குளிரும், இரவில் கடும் குளிரும் வீசி வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பாதிப்பால், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது. வழக்கமாக 2 ஆயிரம் நோயாளிகள் வருகை, தற்போது 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. காய்ச்சல் பாதிப்பிற்காக தினமும் 200 முதல் 300 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
‘சென்னையில் நூற்றுக்கும் மேற்பட் டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை காரணமாக சளி, இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு வருவதற்கு வாய்ப்புள்ளன. ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மற்றும் மழை வெள்ளம் புகுந்த ஊர்களில் உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பி தெரியப்படுத்தலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-24350496, 044-24334811. செல்போன் எண்கள்: 9444340496, 9361482899. 104 என்ற மருத்துவ சேவை எண்ணிலும் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments