தினமலர் செய்தி : தமிழகத்தில், 20 மாவட்டங்களில் கனமழை கொட்டுவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 'தென் மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை, அக்., 28ல் துவங்கினாலும், கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில், மக்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது:தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை, தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதியில், தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. அதனால், கடந்த, 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில், அனேக இடங்கள்; பிற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.
கடல் கொந்தளிக்கும்:
அதிகபட்சமாக, நாகை மாவட்டம், ஆணைக்காரன் சத்திரம் பகுதியில், 18 செ.மீ., சீர்காழியில், 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.அடுத்த, 24 மணி நேரத்திற்கு, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். வட கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை; ஓரிரு இடங்களில் மிக கனமழை; பிற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்படுகின்றனர். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும்; சில நேரங்களில், கனமழை பெய்யும். இலங்கை பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் நோக்கி நகர்ந்து,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால், தமிழகம், புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும்; அதை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு லேசான மழை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, திருச்சி, நாமக்கல், வேலுார், திருவாரூர், ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி என, 14 மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கும்; தர்மபுரி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சை, நீலகிரி என, ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலையில், இன்று நடக்க இருந்த தேர்வுகளும், அண்ணா பல்கலை, அம்பேத்கர் சட்டப் பல்கலைகளில், இன்று முதல் நடக்க இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.வேலுார், திருவள்ளுவர் பல்கலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
140 வீரர்கள்:
தமிழகத்தில் கனமழை பெய்வதால், நிலைமையை சமாளிக்க, ஆந்திராவில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை குழுவின், 10 பட்டாலியனைச் சேர்ந்த, 140 வீரர்கள், நான்கு குழுக்களாக தமிழகம் வந்துள்ளனர். சென்னை, விழுப்புரத்திற்கு, தலா, ஒரு குழுவினரும்; மற்ற, இரண்டு குழுவினர் அரக்கோணம் பட்டாலியனுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். மழை பாதிப்புள்ள பகுதிகளில் இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
சென்னையில் 9 செ.மீ.,:
சென்னையில், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிமுதல், நேற்று காலை, 5:30 மணி வரை, 1 செ.மீ., மழை தான் பதிவாகி இருந்தது. 5:30 மணி முதல், 11:30 மணி வரை கன மழை பெய்ததால், மீனம்பாக்கத்தில், 8 செ.மீ., மழை பதிவானது.மாலை, 6:30 மணி நிலவரப்படி, சென்னையில் சராசரியாக, 9 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. பகல், 1:30 மணி முதல், மாலை வரை அதிக மழை பெய்துள்ளது.
இயல்பு அளவை மிஞ்சும் பருவ மழை:
வட கிழக்கு பருவமழை, 2004 முதல், 2011 வரை இயல்பு அளவு, இயல்பு அளவை மிஞ்சிய மழை என, பதிவாகி உள்ளது. 2005ல் இயல்பை விட, 79 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. 2012ல், 16 சதவீதம் குறைவாகவும், 2013ல், 33 சதவீதம் குறைவாகவும் பெய்தது. 2014ல், 2 சதவீதம் குறைவு. இந்த ஆண்டில், நேற்று வரை சராசரியாக, 34 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வட கிழக்கு பருவ மழை காலமான, மூன்று மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை அளவு, 44 செ.மீ., என்ற இயல்பு நிலையை அடைய இன்னும், 10 செ.மீ., மழை தேவை. கனமழை தொடர்வதால், ஓரிரு நாளில், இயல்பு அளவை மிஞ்சும் என, தெரிகிறது.
மின் வாரியத்திற்கு ரூ.16 கோடி இழப்பு:
இதுவரை 65 பேர் பலி:
தமிழகத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை, 65 பேர் இறந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா, தலா, நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Comments