இதனிடையே கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் முன்னிலையில் கடந்த அக்டோபர் 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பு பதில் தருமாறு உத்தரவிட்டனர். அப்போது தங்களுக்கு கூடுதல் ஆவணங்களை தர வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பும், வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து கர்நாடக அரசு தரப்புக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை நவம்பர் 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன்பின் ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்தனர். இதேபோல் ஜெயலலிதா விடுதலையை ரத்து செய்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் கடந்த 18ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.சி.கோஷ், ஆர்.கே.அகர்வால் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் விசாரிக்க வேண்டிய விசயங்களை தொகுப்பாக அளிக்குமாறு அனைவருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விஷயங்களை குறிப்பிட்டு சொல்வதன் மூலம் எளிதில் விசாரணையை நடத்த முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 2016 ஜனவரி 15ம் தேதி இந்த வழக்கில் முடிவு செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் என்னவென்பதை உச்ச நீதிமன்றம் வகுக்க உள்ளதாகவும் 2016 பிப்ரவரி 2ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக மூத்த வக்கீல் ஆச்சார்யாவும், அவருக்கு உதவியாக வக்கீல் சந்தேஷ் சவுட்டாவும் நியமிக்கப்பட்டனர். இவருடன் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டிலையும் கர்நாடக அரசு நியமித்தது. இந்த நிலையில் மூத்த வக்கீல் ஆச்சார்யா பரிந்துரை செய்ததை ஏற்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட மேலும் ஒரு மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே என்பவரை கர்நாடக அரசு கடந்த மாதம் நியமனம் செய்தது. பிப்ரவரி 2ம் தேதி முதல் தினந்தோறும் நடக்கும் விசாரணையில் ஜெயலலிதாவுக்கு எதிராக துஷ்யந்த் தவே ஆஜராவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 2ம் தேதிமுதல் தினசரி விசாரணைக்கு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை இது ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments