எட்டு மணி நேரம் தான் கடை ஜன. 1 முதல் 'டாஸ்மாக்' நேரம் குறைப்பு

தினமலர் செய்தி : 'டாஸ்மாக்' மது விற்பனை நேரத்தை, பகல், 2:00 முதல் இரவு, 10:00 மணி வரை என, எட்டு மணி நேரமாக குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2016 ஜன., முதல், இந்த நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது : டாஸ்மாக் மது விற்பனையில் இருந்து ஆயத்தீர்வை, விற்பனை வரி வாயிலாக, தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில், மது விற்பனை உள்ளது; எனவே, தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியம் இல்லை.தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளதால், மதுவிலக்கு கோரி பலர் போராடியும், டாஸ்மாக் விற்பனையில் மாற்றம் செய்யவில்லை.

ஆனால், சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்; அதிகாரிகள் கை ஓங்கும் என்பதால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.மேலும் இதனால், பெண்கள் ஓட்டுகளை கவரவும் முடியும் என்பதால், 2016 ஜன., முதல், டாஸ்மாக் கடைகளை, பகல், 2:00 முதல் இரவு, 10:00 மணி வரை என, எட்டு மணிநேரம் மட்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

திடீர் முடிவுக்கு காரணம் என்ன:

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி, பெண்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அரசுக்கு எதிராக, சில மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர்; இதனால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து, தமிழக காங்., தலைவர் இளங்கோவன் தெரிவித்த கருத்தால், அவருக்கு எதிராக, அ.தி.மு.க.,வினர் நடத்திய போராட்டங்களால், மதுவிலக்கு போராட்டங்கள் அமைதியாயின. இந்நிலையில், 'பீஹாரில், 2016 ஏப்., முதல், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். இது, தமிழகத்திலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ளதால், ஜன., முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.6,800 கடைகள்தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், பீர் மற்றும் மது வகைகள் விற்கப்படுகின்றன.

Comments