இந்த சூழ்நிலையில், கடந்த 17-ந் தேதி திமுக சார்பில் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தைப் பெற்று கொள்வதற்கு தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலர் அலுவலகத்துக்குத் தொலைபேசி வாயிலாக திமுக சார்பில் தொடர்பு கொண்டு, காசோலை வழங்க நேரம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதனை வழங்குவதற்கு வாய்ப்பு தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்திற்கு இன்று நேரில் வந்தார் திமுக பொருளாளர் ஸ்டாலின். பின்னர், தலைமைச் செயலகத்தில் நிதித்துறை செயலர் சண்முகத்திடம் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 1 கோடி நிவாரண நிதியை அவர் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தலைமைச் செயலரின் செல்போனில் நான் தொடர்பு கொண்டு நேற்று பேசி, நிவாரண நிதியை கொடுப்பதற்கு நேரம் தருமாறு கேட்டேன். அதற்கு அவர் பார்க்கலாம், பார்க்கலாம் என்று மட்டும் கூறினார். பின்னர், நாங்கள் இதை அரசியலாக்கவில்லை. நீங்கள் ஒதுக்காமல் போனால் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நாங்கள் இதுபற்றி பேச வேண்டியதிருக்கும் எனவும் கூறியிருந்தேன். பின்னர் கருணாநிதியுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது நிதித்துறை செயலரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை கொடுக்குமாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே தலைமை செயலகத்தில் விதிகளை மீறி அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டினார். அதில் தலைமைச் செயலர் கலந்து கொண்டது தவறானது. அதற்கெல்லாம் நேரம் இருக்கும் போது நிவாரண நிதியை பெற அவர்கள் தயங்கியது ஏன்? இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
Comments