ரூ.16000 கோடி கிரானைட் ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு சகாயம் குழு பரிந்துரை

OneIndia News : 16,000 கோடிரூபாய் அளவுக்கு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு தனது 600 பக்க அறிக்கையை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்த இந்த முறைகேட்டில் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது என்றும், இது தொடர்பாக சி.பி.ஐயின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல், மதுரையில் முகாமிட்டு, கிரானைட் முறைகேடுகள் குறித்து, சகாயம் விசாரணை நடத்தினார். 21 கட்டங்களாக சகாயம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சகாயத்திடம் விவசாய நிலங்கள், கண்மாய்கள். நீர்வரத்துக்கால்வாய்கள், மலைகள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். உச்சகட்டமாக நரபலி புகார்கள் வந்தன. அனைத்து தரப்பிலும் விசாரணையை முடித்துக்கொண்ட சகாயம் கடந்த அக்டோபர் 9ம் தேதி மதுரையில் இருந்து சென்னை சென்றார்.

இறுதி அறிக்கையை சென்னையில் இருந்து தயார் செய்தார் சகாயம். அவருக்கு தேவையான உதவிகளை கமிஷனில் பணியாற்றிய அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் உடன் இருந்து செய்தனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, பல முறை, சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

நவம்பர் 23ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் இறுதிக்கெடு அளித்தது. இதனையடுத்து அறிக்கைக்கு இறுதிவடிவம் கொடுப்பதற்காக சகாயம் கடந்த ஒரு வாரமாக இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்கினார். கடந்த 18ம் தேதி அறிக்கை இறுதி வடிவம் பெற்றது. கிரானைட் குவாரியால் எந்த வகையான முறைகேடு நடந்துள்ளது என்பதை 42 தலைப்புகளில், அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கை 8 நகல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 600 பக்கங்களை கொண்ட அறிக்கையை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழு சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் தாக்கல் செய்தார்.

கிரானைட் குவாரிகளினால் இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள இழப்பு மட்டுமில்லாமல், வேளாண்துறைக்கு என்னமாதிரியான இழப்பு ஏற்பட்டிருக்கிறது, பொதுமக்களுக்கு என்னமாதிரியான இழப்பு ஏற்பட்டிருக்கிறது, சுற்றுச்சூழலுக்கு என்னமாதிரியான இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து விரிவான ஒரு அறிக்கையாக இது உள்ளது

கிரானைட் முறைகேடு வழக்கை சிபிஐயின் கீழ் சிறப்பு புலனாய்வுத்துறை விசாரிக்கலாம் எனவும், கிரானைட் முறைகேடு வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கவும் சகாயம் குழு தனது விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

கிரானைட் முறைகேட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே அரசு உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருந்து வந்ததாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

600 பக்க அறிக்கையுடன் நீதிமன்றத்தில் 7000 பக்க ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கறிஞர் சுரேஷ், சகாயம் குழுவிடம் கிரனைட் முறைகேடு குறித்து புகார் அளித்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரையில் நடைபெற்ற விசாரணை குறித்து செய்தியாளர்களுக்கு விரைவில் தெரிவிப்பேன் என்று கூறியுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தனது விசாரணை பற்றி நேர்மையாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Comments