டிச15 முதல் இலங்கையில் இந்தியா-பாக்., கிரிக்கெட் தொடர்

தினமலர் செய்தி : புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் டிச., 15ல் இலங்கையில் நடக்கவுள்ளது. இதற்கான அனுமதியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள், 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடப்பதாக இருந்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவிக்க, தொடரை இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 3 ஒருநாள், 2 'டுவென்டி-20' போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும், தங்களது அரசிடம் அனுமதி கோரின. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இத்தொடருக்கான அனுமதி வழங்கியதாக தெரிகிறது. மத்திய அரசின் அனுமதிக்காக பி.சி.சி.ஐ., காத்திருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இத்தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படலாம்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி மற்றும் பிரிமியர் தொடர் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,'' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் டிசம்பர் 15ம் தேதி இலங்கையில் துவங்கலாம். இத்தொடரை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் சம்மதம் தெரிவித்துவிட்டன. இதற்கு மத்திய அரசு அனுமதி தரும் என நம்புகிறோம். அரசியலையும், விளையாட்டையும் ஒன்றாக கலக்கக்கூடாது,'' என்றார்.

Comments